ADDED : செப் 07, 2011 12:25 AM
குறிச்சி : பணிப்பளுவை அதிகரிக்கக்கோரி, தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கம்(எஸ்.ஆர்.எம்.யூ.,) சார்பில், தர்ணா நடந்தது.போத்தனூரிலுள்ள தென்னக ரயில்வே தொழிற்சாலையான, எஸ் அண்ட் டி முன் நடந்த தர்ணாவுக்கு, எஸ்.ஆர்.எம்.யூ., கிளைச் செயலாளர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். தலைவர் கணேசன், பொருளாளர் மகேஷ் முன்னிலை வகித்தனர். சென்னை கிளையின் உதவி பொது செயலாளர் கலியபெருமாள் பேசுகையில்,''கடந்தாண்டு இத்தொழிற்சாலையில் 60 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தயாரிக்கப்பட்டன.
இவ்வாண்டு இதுவரை ரூ.15 கோடி மதிப்பிலான பொருட்களே தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கு பொருட்கள் தயாரிக்க தேவையான, மூலப்பொருட்களை ரயில்வேயின், வேறு தொழிற்சாலைகளிலிருந்து பெற்று, இங்குள்ள தொழிலாளர்களுக்கு பணிப் பளுவை அதிகரிக்க செய்ய வேண்டும். தனியார் தொழிற்சாலைகளிலிருந்து பெறப்படும் உதிரி பாகங்கள், தரமற்றவையாக உள்ளன; ரயில்வே தொழிற்சாலையின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. '' இதனை தவிர்க்க, தனியாரிடமிருந்து பெறப்படும் உதிரி பாகங்களின் தரத்தை கண்காணிக்க வேண்டும். சென்னை டிவிஷனுக்கு உட்பட்ட இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள தேதியை, மாதத்தின் முதல் நாளாக அறிவிக்க வேண்டும். காலியாக உள்ள 400க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்,'' என்றார். காலை முதல் மாலை வரை தர்ணா நடந்தது. கிளை துணைத்தலைவர் ஜான்சாம்பசிவம் நன்றி கூறினார்.


