Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பயங்கரவாதிகள் மிரட்டல் : சுப்ரீம் கோர்ட்டுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

பயங்கரவாதிகள் மிரட்டல் : சுப்ரீம் கோர்ட்டுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

பயங்கரவாதிகள் மிரட்டல் : சுப்ரீம் கோர்ட்டுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

பயங்கரவாதிகள் மிரட்டல் : சுப்ரீம் கோர்ட்டுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

UPDATED : செப் 10, 2011 11:46 AMADDED : செப் 09, 2011 11:45 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி: டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் பாதுகாப்பை அதிகரிக்கும் படி பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளதால், அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



டில்லி ஐகோர்ட்டில் கடந்த 7ம் தேதி, சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 13 பேர் பலியாகினர்; 90 பேர் படுகாயமடைந்தனர்.

பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள அப்சல் குருவை விடுவிக்கக்கோரி, இந்தியன் முஜாகிதீன்கள் தான் இந்த வெடிகுண்டு சம்பவத்தை நடத்தியுள்ளதாக கூறியுள்ளனர். 'சுப்ரீம் கோர்ட் மற்றும் பல்வேறு மாநில கோர்ட்டுகளிலும், டில்லியின் முக்கியமான இடங்களிலும் வரக்கூடிய காலங்களில் குண்டு வெடிக்கும்' என, முஜாகிதீன் அமைப்பின் சார்பில், இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் எதிரொலியாக, சுப்ரீம் கோர்ட் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் படி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும், சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் கேட்டுக்கொண்டார். காங்கிரஸ் தகவல் தொடர்பாளரும், பிரபல வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி, பார்லிமென்டுக்கு இணையான பாதுகாப்பு, சுப்ரீம் கோர்ட்டில் இருக்க வேண்டும் என, பரிந்துரை செய்துள்ளார்.



இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவாயில், உள்வாயில், கோர்ட் அறை வாசல் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார், கமாண்டோ படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டுக்கு வரும் வாகனங்கள், கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா நேற்று முன்தினம் கோர்ட் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். நாட்டில் உள்ள அனைத்து மாநில ஐகோர்ட்டுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.



மூன்று குழு அமைப்பு: ஐகோர்ட் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க டில்லி துணை போலீஸ் கமிஷனர் அசோக் சந்த், டில்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கொண்ட மூன்று குழு அமைக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபரின் உருவப்படத்தை வரையும் நடவடிக்கையில், டில்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



மூன்று இ-மெயில் கடிதங்கள்: ஐகோர்ட் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, மூன்று இ-மெயில் கடிதங்கள், இந்தியன் முஜாகிதீன்கள் பெயரில் வந்துள்ளன. சுப்ரீம் கோர்ட், டில்லியில் உள்ள சந்தைகள், குஜராத்தின் ஆமதாபாத் நகரம் ஆகிய இடங்கள் குண்டு வெடிப்புக்கு அடுத்த இலக்காக வைக்கப்பட்டுள்ளதாக, இந்த கடிதத்தில் மிரட்டப்பட்டுள்ளது. அலி சயீத் எல் ஹூரி என்ற பெயரில் ஒரு இ- மெயில் வந்துள்ளது. 'அடுத்த படியாக வெடிக்கக்கூடிய குண்டு மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதை, 10 ஆண்டு காலத்துக்கு மறக்க முடியாது. இது தொடர்பாக எங்களிடம் நீங்கள் கேள்வி கேட்பதற்குள் அந்த குண்டுகள் வெடிக்கும்' என, மிரட்டப்பட்டுள்ளது. இந்த கடிதம் அனுப்பிய இடத்தை உடனடியாக தெரிந்து கொள்ளலாம் என, உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



இளைஞர் கைது: இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த இடத்தை கண்டுபிடித்த டில்லி போலீசார், டில்லியில் கிஷ்த்வார் பகுதியில் உள்ள இன்டர்நெட் மையத்தில் இருந்து இ-மெயில் வந்ததையறிந்து, அந்த மையத்தை சீல் வைத்துள்ளனர். இன்டர்நெட் மைய உரிமையாளர் மசூத் அஜிஸ் மற்றும் இந்த மையத்திலிருந்து இ -மெயில் அனுப்பிய டில்லியில் இளங்கலை பட்டப்படிப்பு முதலாமாண்டு படிக்கும் நபர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தான், குற்றவாளிகளின் உருவப்படத்தை போலீசார் வரைந்துள்ளனர்.



இழப்பீடு வினியோகம்: குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்ச ரூபாயும், படுகாயமடைந்து உடல் உறுப்புகளை இழந்துள்ளவர்களுக்கு தலா இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. டில்லி ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில், தற்போது 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ரத்தன் லால் ஷரோப், இரண்டு கால்களையும் இழந்துள்ளார். இவருக்கு, மருத்துவமனை நிர்வாகத்தின் மூலமாக இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மிருதுல் பக்ஷி என்பவருக்கு கால், வயிறு, மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us