Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாசனநீரை முறைகேடாக எடுப்பவர்களுக்கு எச்சரிக்கை : "ஐவர் குழு' அமைத்து கண்காணிக்க முடிவு

பாசனநீரை முறைகேடாக எடுப்பவர்களுக்கு எச்சரிக்கை : "ஐவர் குழு' அமைத்து கண்காணிக்க முடிவு

பாசனநீரை முறைகேடாக எடுப்பவர்களுக்கு எச்சரிக்கை : "ஐவர் குழு' அமைத்து கண்காணிக்க முடிவு

பாசனநீரை முறைகேடாக எடுப்பவர்களுக்கு எச்சரிக்கை : "ஐவர் குழு' அமைத்து கண்காணிக்க முடிவு

ADDED : ஆக 09, 2011 02:54 AM


Google News

பொள்ளாச்சி : திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரை, முறைகேடாக எடுப்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க 'ஐவர் குழு' அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு லட்சம் ஏக்கர் பாசன பரப்புள்ள நான்காம் மண்டல பாசனத்திற்கு வரும் செப்., 1ல் தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் போது, முறைகேடாக குழாய் பதித்து தண்ணீரை எடுத்து பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டக்குழு நிர்வாகிகள் வலியுறுத்தினர்.கூட்டத்தில் பி.ஏ.பி., அதிகாரிகள் பேசும்போது, கடந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்ட போது மழை பொழிவு இல்லாமல் வறட்சியாக இருந்தது. அதனால், பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை பல இடங்களில் விவசாயிகள் எடுத்து பயன்படுத்தினர்.கால்வாய் அருகில் மோட்டார் வைத்து குழாயில் தண்ணீர் எடுத்தனர். அந்த, தண்ணீரை கிணற்றுக்கு கொண்டு சென்று பாசனத்திற்கு பயன்படுத்தினர். பாசனத்திற்கு உட்பட்ட விவசாயிகள், மற்ற விவசாயிகளும் தண்ணீர் முறைகேடாக எடுத்தனர். விவசாயிகளே தண்ணீரை முறைகேடாக எடுத்ததால், கடைமடையில் உள்ள பாசன விவசாயிக்கு தண்ணீர் முழுமையாக வழங்க முடியாத சூழ்நிலை உருவானது. சில இடங்களில் பாசன சங்க தலைவர்கள் அதிகாரிகளுடன் வந்து தண்ணீரை முறைகேடாக எடுத்தவர்களை எச்சரித்து, தவறை சரிசெய்தனர்.இந்த முறை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்போது, தவறு நடக்காமல் கண்காணிக்க வேண்டும். நீர் வினியோகம் செய்யும் பாசன சங்க தலைவர்கள் இதற்கு முன்வரவேண்டும். அப்போது தான் தவறுகளை தடுக்க முடியும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.



திட்டக்குழு நிர்வாகிகள் பேசியதாவது:பாசனத்திற்கு தண்ணீர் திறந்ததும், செப்., மாதம் மட்டும் மழை இருக்காது. அக்., மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி விடும். அதனால், பாசன தண்ணீர் முறைகேடாக எடுக்க வாய்ப்பு குறைவு. ஜன., பிப்., மாதம் முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது, வறட்சியான காலநிலை இருக்கும். அப்போது, பாசன தண்ணீர் முறைகேடாக எடுக்க அதிக வாய்ப்புள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரை முறைகேடாக எடுப்பதை தடுக்க, பி.ஏ.பி., வருவாய்த்துறை, போலீஸ், மின்வாரியம் மற்றும் பாசன சங்க தலைவர்களை கொண்டு 'ஐவர் குழு' அமைக்க வேண்டும். இந்த குழு இரவு பகலாக கண்காணித்து, முறைகேட்டை தடுக்க வேண்டும்.தவறு செய்பவர்களை கையும் களவுமாக பிடித்ததும், போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன கிணற்றிலுள்ள மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். அப்போது தான் முறைகேடாக தண்ணீர் எடுப்பதை தடுக்க முடியும். பாசன சங்க தலைவர்களும் பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us