/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மஞ்சள் ஏற்றுமதி குறைவால் மேலும் விலை சரிய வாய்ப்புமஞ்சள் ஏற்றுமதி குறைவால் மேலும் விலை சரிய வாய்ப்பு
மஞ்சள் ஏற்றுமதி குறைவால் மேலும் விலை சரிய வாய்ப்பு
மஞ்சள் ஏற்றுமதி குறைவால் மேலும் விலை சரிய வாய்ப்பு
மஞ்சள் ஏற்றுமதி குறைவால் மேலும் விலை சரிய வாய்ப்பு
ADDED : செப் 07, 2011 01:39 AM
ஈரோடு :இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கான மஞ்சள் ஏற்றுமதி 14 சதவீதம் குறைந்துள்ளதால், மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.
மஞ்சள் விலை குவிண்டாலுக்கு 16 ஆயிரம் ரூபாய் வரை, 2010ல் விலை போனது. தற்போது, அதிகபட்சமாக 6,500 ரூபாய் வரையே விற்கப்படுகிறது. மஞ்சள் சாகுபடி பரப்பளவு 25 சதவீதம் அதிகரித்ததால், 2009-2010ல் 48 லட்சம் மூட்டை மஞ்சள் ஈரோட்டில் இருந்தது. தற்போது 70 லட்சம் மூட்டையாக உயர்ந்ததே விலை வீழ்ச்சிக்கு காரணம்.
மஞ்சள் ஏஜன்ட் ஒருவர் கூறியதாவது: வெளிநாடு மற்றும் வடமாநிலங்களில் தேவை குறைவால், மஞ்சள் ஏற்றுமதி 14 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் அதிக மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலமாக ஆந்திரா திகழ்கிறது. இங்கு 40 சதவீதம் மஞ்சள் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் மஞ்சள் சாகுபடி ஒன்பது சதவீதம் அதிகரித்து, 0.43 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 0.4 முதல் 0.5 லட்சம் டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆந்திரா மாநில மஞ்சள் சந்தைகளில் வரத்து குறைந்துள்ளது. ஆனால், ஈரோடு சந்தையில் விலை குறைந்தும், வரத்து குறையவே இல்லை. டிசம்பர் மாதத்தில் பெய்த நல்ல மழையால் மஞ்சளின் தரமும் குறைந்துள்ளது. தரம் குறைந்த மஞ்சள் அதிக இருப்பு, குறைந்த ஏற்றுமதி காரணமாக தொடர்ந்து மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு மஞ்சள் விலை உயர்வதற்கான வாய்ப்பே இல்லை.
வரும் 2012 ஜூன் மாதத்தில் சாகுபடியாகும் மஞ்சள் பரப்பு, அப்போதைய இருப்பு விபரம், பண்டிகை கால தேவை குறித்தே விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தீபாவளி சமயத்தில் மஞ்சள் தேவை வடமாநிலங்களில் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது குவிண்டாலுக்கு 500 முதல் ஆயிரம் ரூபாய் உயர வாய்ப்புள்ளது. மீண்டும் விலை சரியவே செய்யும். எனவே, மேலும் மஞ்சள் விலை குறைவதற்கு முன் இருப்புள்ள மஞ்சளை விவசாயிகள் விற்பனை செய்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.


