பக்கங்களை நீக்க காழ்ப்புணர்வே காரணம்:கருணாநிதி
பக்கங்களை நீக்க காழ்ப்புணர்வே காரணம்:கருணாநிதி
பக்கங்களை நீக்க காழ்ப்புணர்வே காரணம்:கருணாநிதி
UPDATED : ஆக 13, 2011 12:43 AM
ADDED : ஆக 12, 2011 11:23 PM

சென்னை:''சமச்சீர் பாடப் புத்தகங்களில் குறிப்பிட்ட சில பக்கங்களை நீக்க அ.தி.மு.க., அரசு உத்தரவிட்டதற்கு காழ்ப்புணர்வே காரணம்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த கோர்ட் உத்தரவிட்டதால், அதையொட்டி, கல்வித் துறை சார்பில் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், சமச்சீர் பாடப் புத்தகங்களில் நீக்கப்பட வேண்டிய பகுதிகளை, 'ஸ்டிக்கர்' ஒட்டி மறைத்து விட்டும், சில இடங்களில் கறுப்பு நிற மார்க்கர் பேனா கொண்டு அடித்துவிட்டும் வழங்க வேண்டுமென கூறியுள்ளனர்.எல்லா வகுப்பு பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள செம்மொழி வாழ்த்தை, 'ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
அந்தப் பாடலில், மாணவர்கள் படிக்கக் கூடாத வார்த்தை ஏதும் இல்லை. இந்தப் பாடலை நான் எழுதினேன் என்பதற்காக இதை மறைக்க கூறியுள்ளனர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தஞ்சையில் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுப் பாடலில், தமிழை வாழ்த்துவதற்கு பதிலாக ஜெயலலிதாவின் புகழ் பாடப்பட்டது. அது போன்று, செம்மொழி வாழ்த்துப் பாடலில் முதல்வரை பாராட்டி ஏதாவது ஒரு வார்த்தை இடம் பெற்றுள்ளதா? ஆனாலும் அதை நீக்க வேண்டும் என்கின்றனர்.
இதுபோல், ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாடப் புத்தகங்களில், நீக்குவதற்கு உத்தரவிட்டுள்ள பாடப் பகுதிகளை ஆராய்ந்தால் அதில், என்னையோ, தி.மு.க., அரசையோ புகழ்ந்து எங்கும் சொல்லப்படவில்லை. 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இரண்டு இடங்களில் தி.மு.க., அரசு என்ற வார்த்தை இடம் பெற்ற காரணத்தால் அதை அழிக்க வேண்டும் என சொன்னதை ஏற்றுக் கொள்கிறோம். மற்ற பாடப் புத்தகங்களில் குறிப்பிட்ட பாடப் பகுதிகளை நீக்க உத்தரவிட்டதற்கு காழ்ப்புணர்வே காரணம்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


