/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விதை நெல் சேமிக்க கிராமங்களில் கிடங்குகள்விதை நெல் சேமிக்க கிராமங்களில் கிடங்குகள்
விதை நெல் சேமிக்க கிராமங்களில் கிடங்குகள்
விதை நெல் சேமிக்க கிராமங்களில் கிடங்குகள்
விதை நெல் சேமிக்க கிராமங்களில் கிடங்குகள்
ADDED : ஆக 25, 2011 02:03 AM
புதுச்சேரி : நெல் விதைகளை சேமிக்க கிராமங்களில் கிடங்கு வசதி ஏற்படுத்தப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் தொடர்பாக பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள்: நடப்பு நிதியாண்டில் வேளாண் துறைக்கு ரூ.95.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது,கடந்தாண்டு ஒதுக்கீட்டைவிட 79 சதவீதம் அதிகம். விவசாயிகளின் வருமானம் பெருகவும், அவர்களின் விளைப்பொருட்களின் மதிப்பு கூடும் வகையில், நெல் அடிக்கும் களங்கள், ஊரக கிடங்குகள், குளிரூட்டப்பட்ட கிடங்குகள், பதப்படுத்தும் கூடங்கள் அமைக்கப்படும். விதை கிராமங்களாக ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், சேலியமேடு, பாகூர், சிவராந்தகம், சோரப்பட்டு ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நெல் விதை உற்பத்தியை மேம்படுத்த, விதைகளை சேமிக்க அந்தந்த கிராமங்களில் கிடங்குவசதிகள் ஏற்படுத்தப்படும்.
இந்த நிதியாண்டில் 3 கரும்பு அறுவடை இயந்திரங்கள் வாங்கப்பட்டு, கரும்பாலை மூலமாக 50 சதவீத மானியத்திலும், காரைக்காலில் நெல் நடும் இயந்திரம், அறுவடை இயந்திரம் வாங்கப்பட்டு, 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படும். காரைக்காலில் வேலிகாத்தான், பார்த்தீனியம் செடிகளை வேரோடு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தானிய வகைகள், பயறு வகைகள், எண்ணெய் வித்து சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்தும் வகையில், அறுவடைக்குப் பிந்தைய மானியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்.
புதுச்சேரியில், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பயிர் சார்ந்த குழுக்களுக்கு 75 சதவீத மானிய விலையில் இயந்திரங்கள் வழங்கப்படும். மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் ரூ.4.64 கோடி வழங்கப்பட்டது. இது, நடப்பு நிதியாண்டில் ரூ.31.29 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தை செயல்படுத்த, மாநில வேளாண் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.


