குவிந்து கிடக்கும் வழக்குகளால் தவிக்கும் மின்சார துறை :வக்கீல் நியமன தாமதத்தால் தொடருது சிக்கல்
குவிந்து கிடக்கும் வழக்குகளால் தவிக்கும் மின்சார துறை :வக்கீல் நியமன தாமதத்தால் தொடருது சிக்கல்
குவிந்து கிடக்கும் வழக்குகளால் தவிக்கும் மின்சார துறை :வக்கீல் நியமன தாமதத்தால் தொடருது சிக்கல்
அரசு சார்பில் துறை ரீதியாக ஆஜராகும் வக்கீல்களை நியமிக்காததால், வழக்குகளை முடிக்க முடியாமல், தமிழக மின்துறை திணறுகிறது.
சீரமைப்பு நடவடிக்கைகளை துவங்கினாலும், அதற்கு பல முட்டுக்கட்டைகள் இருப்பதால் மின்வாரியத்திற்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய கருவிகள், டிரான்ஸ்பார்மர்கள், மீட்டர்கள், 'ஸ்டாக்' இல்லாததால் அவற்றை மாற்ற முடியாத நிலை உள்ளது. புதிய பொருட்களை வாங்குவதற்கு, முறைப்படி மின்வாரிய தலைவர் தலைமையில் கூட்டம் நடத்தி, டெண்டர் அறிவிப்பு செய்ய வேண்டும். ஆனால், டெண்டர் அறிவிக்க முடியாத நிலையில் மின்வாரியம் உள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, மின்வாரியத்தை எதிர்த்து கோர்ட்டில் தேங்கியிருக்கும் வழக்குகளாகும். புதிய தொழில்நுட்பக் கருவிகள், மீட்டர்கள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை கொள்முதலுக்கான டெண்டர், தொழிற்சங்க பிரச்னைகள், இடமாற்றம், பதவி உயர்வு போன்ற பல விவகாரங்கள் தொடர்பாக, தமிழகம் முழுவதும் மின்துறை மீதான, 6,000 வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன. இதில், சென்னை ஐகோர்ட்டில் மட்டும், 2,500 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மின்வாரியத்தை பொறுத்தவரை, கடந்த ஆட்சியில், துறை ரீதியான அதிகாரபூர்வ வக்கீல்களாக, 11 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்தலுக்கு பின், ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால், தி.மு.க., அரசால் நியமிக்கப்பட்ட அனைத்து அரசு வக்கீல்களும் பதவியை ராஜினாமா செய்தனர். இதில், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் மகன் செல்வேந்திரன் உட்பட அனைத்து மின்துறை வக்கீல்களும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, மின்துறை தொடர்பான வழக்குகளை நடத்த அரசு வக்கீல்கள் நியமிக்கப்படவில்லை. மின்துறையை சீரமைக்க வேண்டிய நிலையில், துறை ரீதியான வக்கீல்கள் இல்லாமல், பல வழக்குகளுக்கு மின்துறையினர், கோர்ட்டில் கால அவகாசம் கேட்டு வருகின்றனர். தற்போது, அவசர வழக்குகளை நடத்தும் வகையில், ஐகோர்ட்டில் வாசுதேவன் என்ற வக்கீலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், மின்துறை வழக்குகளை நடத்த செல்வக்குமார் என்ற வக்கீலும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,'தமிழக மின்துறையில் சீரமைப்பு நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால், பல நடவடிக்கைகள், கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளால், தேக்கமடைந்துள்ளன. துறைரீதியாக தாக்கலாகும் வழக்குகளை நடத்த, அரசியல் சார்பற்ற முறையில் வக்கீல்களை நியமித்தால், ஆட்சி மாற்றத்தின் போது, இது போன்ற பிரச்னை ஏற்படாது' என்றார்.
வழக்குகளை முடிக்க அதிகாரிகள் ஆர்வம்
மின்துறைக்கு போதிய அரசு வக்கீல்கள் நியமிக்கப்படாததால், மின்துறை அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால், கடந்த மே மாதம் முதல், அவசரமாக முடிக்க வேண்டிய வழக்குகளையும் முடிக்க முடியாமல் திணறுகின்றனர். தற்போது, முக்கிய பிரச்னைகளுக்கு காரணமாகவிருக்கும் வழக்குகளையாவது விரைந்து முடிக்க, மின்துறை அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். இதில், டிரான்ஸ்பார்மர்கள் டெண்டர் மற்றும் மீட்டர்கள் கொள்முதல் தொடர்பான வழக்குகளை, முதற்கட்டமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுகுறித்து, மின்துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, 'பல நிறுவனங்கள் மின்துறையை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்துள்ளன. இதனால், ஆக்கப்பூர்வமான பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
நமது சிறப்பு நிருபர்