பொட்டு சுரேஷ் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு :தி.மு.க., நிர்வாகிகள் தலைமறைவு
பொட்டு சுரேஷ் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு :தி.மு.க., நிர்வாகிகள் தலைமறைவு
பொட்டு சுரேஷ் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு :தி.மு.க., நிர்வாகிகள் தலைமறைவு
ADDED : ஜூலை 25, 2011 12:13 AM

மதுரை : மதுரையில் 51 லட்ச ரூபாய் மதிப்புள்ள இடத்தை மிரட்டி அபகரித்ததாக,
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் (சுரேஷ்பாபு), நகர
துணைச் செயலர் உதயகுமார் உட்பட 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்
நேற்று வழக்கு பதிவு செய்தனர்.மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் அமர்நாத்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். சில ஆண்டுகளுக்கு முன், சென்னையைச் சேர்ந்த
ரவிக்குமார் என்பவருக்கு தொழிற்சாலை நடத்துவதற்காக, 100 ஏக்கர் நலம்
தேவைப்படுவதாக அமர்நாத்தை தி.மு.க., நிர்வாகிகள் சிலர் அணுகினர். மதுரை
பெருங்குடி அருகே சம்பக்குளத்தில் உள்ள அமர்நாத்தின் 40 ஏக்கர் மற்றும் 80
சென்ட் இடத்தை முதற்கட்டமாக பத்திரப்பதிவு செய்ய, மூன்று தவணைகளாக மொத்தம்
10 லட்ச ரூபாய் அட்வான்ஸ் தரப்பட்டது. பத்திரப்பதிவு செய்வதற்கு முதல்நாள்
(2009 ஜூலை 14), கோகலே ரோட்டில் உள்ள பொட்டு சுரேஷ் அலுவலகத்தில் தன்னை
மிரட்டியும், வீட்டைத் தாக்கியும் 51 லட்ச ரூபாய் மதிப்புள்ள இடத்தை
அபகரித்ததாக தி.மு.க., நிர்வாகிகள் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில்
நேற்று முன் தினம் அமர்நாத் புகார் செய்தார். இதன் அடிப்படையில், பொட்டு
சுரேஷ், உதயகுமார், பொதுக்குழு உறுப்பினர் சூடம்மணி, கே.கே.நகர் தொழிலதிபர்
மாணிக்கம், பாலமுருகன், ரவிக்குமார் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம்
109 (குற்றத்திற்கு உடந்தை), 406 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி), 323
(தன்னிச்சையாகக் காயம் விளைவித்தல்), 506 ( மிரட்டல்) உட்பட 6 பிரிவுகளின்
கீழும், பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மாணிக்கத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். முதலாவது மாஜிஸ்திரேட்
முத்துக்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார். போலீசார்
கூறுகையில், ''கோவையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில்
உறுப்பினர்கள் உதயகுமார், சூடம்மணி பங்கேற்காததால் அவர்கள் தலைமறைவாகி
இருக்கலாம். மலேசியாவில் சில மாதங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளில் உதயகுமார்
ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து விசாரிக்கிறோம்,''
என்றனர்.