இடம் ஒதுக்காததால் கார் தொழிற்சாலை துவக்குவதில் தாமதம்
இடம் ஒதுக்காததால் கார் தொழிற்சாலை துவக்குவதில் தாமதம்
இடம் ஒதுக்காததால் கார் தொழிற்சாலை துவக்குவதில் தாமதம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ., பிஜோ சிட்ரான் நிறுவனம், சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகாலில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது.இதற்காக, இந்நிறுவன பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குழுவினர் பல்வேறு கட்டங்களாக, தொழிற்சாலை அமையவுள்ள வல்லம் வடகால் இடத்தை, ஐந்து முறை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தமிழக தொழில் துறை அதிகாரிகள் அணுகுமுறை, சிறந்த கட்டமைப்பு வசதி, சாலை போக்குவரத்து, துறைமுக வசதி, திறமை வாய்ந்த தொழிலாளர், அதிக பொறியியல் கல்லூரிகள் கொண்ட நகரமாக சென்னை விளங்குவதால், வல்லம் வடகாலில் தொழிற்சாலை அமைக்க இந்நிறுவனம் விரும்பியது.வல்லம் வடகாலில் அமைய உள்ள தொழிற்சாலை, முதல் கட்டமாக ஆண்டுக்கு, மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம், நேரடியாக 6,000 பேருக்கும், மறைமுகமாக, 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
சென்ற ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, பி.எஸ்.ஏ., நிறுவன (இந்தியா) நிர்வாக இயக்குனர் பிரெட்ரிக் பேப்ரி, தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த பின், தொழிற்சாலையின் தோராய வரைபடத்தைக் கூட தயாரித்து வைத்துள்ளனர். தற்போது, இந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கும் பணியில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, ஏழு கி.மீ., தொலைவில் உள்ளது வல்லம் வடகால். இங்கு தான் பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு, 450 முதல் 600 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளது. வல்லம் வடகால், பூதனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஒரகடத்தில் நிலம் கையகப்படுத்திய போது, அரசு ஒரு ஏக்கர் நிலத்திற்கு, எட்டு முதல் 10 லட்ச ரூபாய் வரை வழங்கியது.
வல்லம் வடகாலில், 10 முதல், 15 லட்ச ரூபாய் வரை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் இதை ஏற்கவில்லை.இதனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தி, பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு ஒதுக்கித் தந்தால், உடனடியாக தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கத் தயாராக உள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் தலையிட்டு, இடத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று, நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
குஜராத்திற்கு தாவும்தொழில் முனைவோர்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமது மாநிலத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிக சலுகை காட்டுகிறார். இவரது நடவடிக்கையால் கவரப்பட்ட போர்டு நிறுவனம், தமிழகத்தில் விரிவாக்கம் செய்யாமல், குஜராத்திற்கு இடம்பெயர்ந்து விட்டது. தற்போது, பி.எஸ்.ஏ., நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த மறுநாளே, குஜராத் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளது. இருப்பினும், அந்நிறுவனத்தினர், சென்னையில் கார் தொழிற்சாலை அமைக்கத் தான் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் போர்டு, ஹுண்டாய், நிசான், செயின்ட் கோபெயின் நிறுவனங்களின் தொழிற்சாலை இருந்தாலும், வேலைவாய்ப்பை அதிகளவில் வழங்குவதற்கு, அவை மட்டும் போதாது.எனவே தமிழகத்தை, தொழிற்துறையில் முன்னேற்ற விரும்பும் முதல்வர், தொழில் முதலீட்டாளர்களை பிற மாநிலங்களுக்குச் செல்ல விடாமல் தடுப்பதுடன், புதிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிவகை செய்ய வேண்டியது அவசியம். - வீ.அரிகரசுதன் -


