ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரம் சேர்க்கக் கோரி சாமி மனு தாக்கல்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரம் சேர்க்கக் கோரி சாமி மனு தாக்கல்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரம் சேர்க்கக் கோரி சாமி மனு தாக்கல்
ADDED : செப் 16, 2011 12:14 AM

புதுடில்லி: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கக்கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட்டில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது கடந்த மாதம் 26ம் தேதி நடந்த விசாரணையின் போது, சுப்ரமணியசாமி, 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கில், நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தையும், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சிதம்பரத்தை இந்த வழக்கில் சேர்ப்பது குறித்து, மனு தாக்கல் செய்ய, சிறப்புக் கோர்ட் நீதிபதி சைனி, கால அவகாசம் அளித்தார்.
அதன்படி சுப்ரமணியசாமி நேற்று புதிதாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விளக்கத்தை பார்த்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விடாமல் விற்பது என எடுத்த முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டதும், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராஜா மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகிறது.
எனவே இவ்வழக்கில், அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும். இது தொடர்பாக சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை முழுமையானதாக இல்லை. சிதம்பரத்தையும் சேர்த்து புதிய வாக்குமூலம் பெறப்பட வேண்டும். இவ்வாறு சாமி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஒத்திவைப்பு: '2ஜி' வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கனிமொழி உட்பட 17 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பாக, சிறப்புக் கோர்ட் நேற்று உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தது. ஆனால், நேற்று இந்த விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, இரண்டு புதிய ஆதாரங்களை சி.பி.ஐ., பதிவு செய்ய உள்ளது. இதன் காரணமாக, குற்றச்சாட்டு பதிவு செய்வது ஒத்தி வைக்கப்பட்டது.


