Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுயதொழில் பயிற்சி மையம் நடத்தி மோசடி சுருட்டலில் புதுவிதம்; போலீஸ் விசாரணை

சுயதொழில் பயிற்சி மையம் நடத்தி மோசடி சுருட்டலில் புதுவிதம்; போலீஸ் விசாரணை

சுயதொழில் பயிற்சி மையம் நடத்தி மோசடி சுருட்டலில் புதுவிதம்; போலீஸ் விசாரணை

சுயதொழில் பயிற்சி மையம் நடத்தி மோசடி சுருட்டலில் புதுவிதம்; போலீஸ் விசாரணை

ADDED : அக் 07, 2011 11:53 PM


Google News

கோவை : 'வீட்டிலிருந்தபடியே சுயதொழிலாக மெழுகுவர்த்தி தயாரித்து, மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை கை

நிறைய சம்பாதிக்கலாம்' என, விளம்பரம் செய்த மோசடி நபர், கோவையில் 800 பேரிடம் 1.5 கோடி ரூபாய் வசூலித்து கொண்டு மாயமானார்.

பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.கோவை, பாப்பநாயக்கன்பாளையம், ஜி.எச்., காலனி, 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு(40). இவர் அதேபகுதியில், 'விநாயகா கேண்டில்ஸ் தொழிற்பயிற்சி மையம்' நடத்தி வந்தார். வேலையற்றோர், வீட்டிலிருக்கும் பெண்கள் சுயதொழில் அடிப்படையில் மெழுகுவர்த்தி தயாரித்து விற்பனை செய்யலாம் என்றும், மாதம் தோறும் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்றும் விளம்பரம் செய்தார். இதைநம்பி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட 800 பேர் கடந்த ஆறு மாதங்களில் சுரேஷ் பாபுவை அணுகினர்.ஒவ்வொருவரிடமும் தலா 20 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை வசூலித்த இந்நபர், மெழுகுவர்த்தி தயாரிக்கும் பயிற்சியை அளித்தார். பின்னர், மெழுகுவர்த்தி தயாரிக்க 5,000 ரூபாய் மதிப்பிலான ஆளுக்கொரு 'டையிங் மெஷினை' வழங்கினார். கூடவே, உடைந்து சேதமடைந்த மெழுகுவர்த்திகளையும் கிலோ கணக்கில் வழங்கினார். இவற்றை கிலோ 100 ரூபாய் என்ற விலையில் கொடுத்து, நல்ல முறையிலான மெழுகுவர்த்திகளை தயாரிக்குமாறு கூறி, கிலோ 125 ரூபாய்க்கு திரும்பப் பெற்றார். கிலோவுக்கு 25 ரூபாய் வருமானம் கிடைத்ததால் பலரும் தங்களுக்கு அறிமுகமான நபர்களை இத்தொழிலில் ஈடுபடுத்தினர். ஏறத்தாழ 800 பேரிடம் பணம் வசூலித்திருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் சுரேஷ்பாபு திடீரென குடும்பத்துடன் மாயமானார்; வீட்டில் பூட்டு தொங்கியது.தாங்கள் தயாரித்த மெழுகுவர்த்திகளை ஒப்படைக்கச் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து, சுரேஷ்பாபுவை மொபைல் போனில் தொடர்பு கொண்டனர்; 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. தங்களது முதலீட்டுப்பணம் பறிபோனதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரண்டு புகார் அளித்தனர். சுரேஷ்பாபுவால் ஏமாற்றப்பட்டோரில் பாதி பேர் பெண்கள். வீட்டில் சுயமாக தொழில்துவங்கி குடும்பத்தின் பணத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் முனைப்பில் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிலில் இறங்கியவர்கள்.



சுரேஷ்பாபுவிடம் பணத்தை பறிகொடுத்த திருப்பூர், வஞ்சிபாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம்(60) கூறியதாவது:பணி ஓய்வு பெற்று வீட்டிலிருந்த நான், 'சும்மா இருக்கும் நேரத்தில் சுயதொழில் செய்யலாமே' என்ற ஆவலில் சுரேஷ்பாபுவை அணுகினேன். அதிகளவில் மெழுகுவர்த்தி தயாரிக்க ஆர்டர் தருவதாக கூறிய அந்நபர் என்னிடம் 50 ஆயிரம் ரூபாயை 'டிபாசிட்டாக' பெற்றார். மெழுகுவர்த்தி தயாரிப்பதற்கான 'டையிங் மெஷினை'யும் வழங்கினார். ஒருமாதமே ஆன நிலையில் அந்நபர் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். 'சுயமாக உழைத்து முன்னேற வேண்டும்' என்ற முனைப்பில்தான் மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிலில் இறங்கினோம். இப்போது முதலீட்டுப் பணத்தையும் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்.இவ்வாறு, ஆறுமுகம் தெரிவித்தார்.கோவை நகரைச் சேர்ந்த தண்டபாணி (59) கூறியதாவது:நான், டெக்ஸ்டூல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். நிறுவனம் மூடப்பட்டபின் குடும்ப வருமானத்துக்கு வழி இல்லாமல் சுயமாக தொழில் துவங்க சுரேஷ்பாபுவை அணுகினேன். அந்நபர் என்னிடம் 20 ஆயிரம் வரை வசூலித்து மோசடி செய்துவிட்டார். உடைந்து, சேதமான மெழுகுவர்த்திகளை எங்களுக்கு கொடுத்து, அதை வீட்டு பாத்திரத்தில் போட்டு உருக்கி, டையிங் மெஷினில் ஊற்றி மெழுகுவர்த்தி தயாரிக்குமாறு கூறினார். நான் ஓரிரு முறை தயாரித்து கொடுத்த மெழுகுவர்த்திகளை விலைக்கு வாங்கிக்கொண்டார். அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறினார். ஒருமுறை கூடுதலாக ஆர்டர் தருமாறு கேட்டபோது, இன்னும் சில நாட்களில் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்அதிகளவில் கிடைக்கும் என்றும், அதுவரை காத்திருக்குமாறும் கூறினார். அவரது பேச்சை நம்பி மோசம் போய்விட்டோம்.இவ்வாறு, தண்டபாணி தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us