ஓட்டு கேட்க பணத்துடன் வந்த ஏழு பேர் கைது
ஓட்டு கேட்க பணத்துடன் வந்த ஏழு பேர் கைது
ஓட்டு கேட்க பணத்துடன் வந்த ஏழு பேர் கைது
ADDED : அக் 12, 2011 11:32 PM
காஞ்சிபுரம் : செங்கல்பட்டில் தங்கியுள்ள, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களிடம் ஓட்டு கேட்பதற்காக, பணத்துடன் வந்த ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 27 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவிற்குட்பட்ட, மருத்துவான்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி. இவரது மனைவி சித்ரா. இவர், ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அந்த ஊரைச் சேர்ந்த பிரகாசம், தனது குடும்பத்தினருடன் செங்கல்பட்டில் வசித்து வருகிறார். அவர்களுக்கு மருத்துவன்பாடி கிராமத்தில் ஓட்டு உள்ளது. அவர்களிடம் ஓட்டு சேகரிப்பதற்காக, நாராயணமூர்த்தி, 42, பிரகாசம் உறவினர் சுபாஷ் சந்திரபோஸ், 29, சுந்தர்ராஜன், 35, சுரேஷ், 39, சுப்ரமணி, 53, முனியக்கண்ணன், 45, பிரசாந்த், 21, ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு, டாடா சுமோவில் செங்கல்பட்டு வந்தனர்.
காரை பிரசாந்த் ஓட்டினார். செங்கல்பட்டு தண்டுக்கரை பெட்ரோல் பங்க் அருகே, இரவு 2 மணிக்கு வந்தபோது, அங்கு வாகனச் சோதனை நடத்திக் கொண்டிருந்த, இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார், டாடா சுமோவை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பிரகாசம் குடும்பத்தினரிடம் ஓட்டு கேட்கவும், பணம் கொடுக்கவும் வந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, போலீசார் டாடா சுமோவில் வந்த ஏழு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 27 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் டாடா சுமோவை பறிமுதல் செய்தனர்.


