குஜராத் போல் நிர்வாகம்; உறுதி தரும் பா.ஜ.,
குஜராத் போல் நிர்வாகம்; உறுதி தரும் பா.ஜ.,
குஜராத் போல் நிர்வாகம்; உறுதி தரும் பா.ஜ.,
ADDED : அக் 14, 2011 10:52 AM

திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு பா.ஜ., சார்பில் சின்னச்சாமி போட்டியிடுகிறார்.
தூய்மையான, லஞ்ச, லாவன்யம் அற்ற உள்ளாட்சி நிர்வாகத்தை தருவோம் என களத்தில் பிரசாரம் செய்து வருகிறார். காலை 8.00 மணிக்கு பிரசாரத்தை துவக்குகிறார். முன்னால், வேட்பாளர் வருகையை அறிவிக்கும் பிரசார வாகனம் மற்றும் தொண்டர்கள் பைக்கில் பின் தொடர்கின்றனர். செரங்காடு பகுதியில் வாகனத்தில் நின்றவாறு, பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
பொதுமக்கள் நிற்கும் இடங்களில் இறங்கிச் சென்று சகஜமாக பேசி, ஆதரவு திரட்டுகிறார். உறவினர்களிடம், தெரிந்தவர்களிடம், மாமா, மாப்ளே, அண்ணே, ஆத்தா... 'இந்த முறை மாற்றத்தை தாருங்கள்; ஒரு முறை பா.ஜ., ஓட்டு போடுங்கள்; மறந்திராதீங்க,' என பேசியபடியே நடக்கிறார்.
காலை முதல் மின்னல் வேக பிரசாரத்தில், ஓய்வு இல்லாமல் ஈடுபட்ட வேட்பாளருக்கு, காளிபாளையம் கிராமத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்த உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு லட்டு, மிக்சர், ஜூஸ் வழங்கப்பட்டது.
வாகனம் வரும் வழியில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த பெண்களை பார்த்ததும், வாகனத்தில் இருந்து இறங்கி, விவசாய பகுதிக்குச் சென்று, அவர்களிடம் ஓட்டு சேகரித்தார். ஒவ்வொரு இடத்திலும் குஜராத் போல் நிர்வாகம் செய்வோம் என உறுதி கூறி, பா.ஜ.,வினர் பிரசாரம் செய்தனர்.


