Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வால் எம்.எல்.ஏ.,க்கள் குஷி : நிபந்தனை விதிப்பதால் அதிருப்தி

தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வால் எம்.எல்.ஏ.,க்கள் குஷி : நிபந்தனை விதிப்பதால் அதிருப்தி

தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வால் எம்.எல்.ஏ.,க்கள் குஷி : நிபந்தனை விதிப்பதால் அதிருப்தி

தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வால் எம்.எல்.ஏ.,க்கள் குஷி : நிபந்தனை விதிப்பதால் அதிருப்தி

UPDATED : ஆக 07, 2011 02:51 AMADDED : ஆக 07, 2011 12:07 AM


Google News

சென்னை : எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை, 2 கோடி ரூபாயாக உயர்த்தியதற்கு, எம்.எல்.ஏ.,க்களிடையே வரவேற்பு இருந்தாலும், அந்த நிதியை தாங்கள் விருப்பப்படும் பணிகளுக்கு செலவழிக்க விடாமல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



எம்.எல்.ஏ.,க்களுக்கான தொகுதி மேம்பாடு நிதி, ஆண்டுக்கு 2 கோடி ரூபாயாக உயர்த்தி, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதி உயர்வுக்கு, எம்.எல்.ஏ.,க்களிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது. எனினும், தற்போது உயர்த்தப்பட்டுள்ள 25 லட்சம் ரூபாய் நிதியை, பள்ளிகளின் குடிநீர் தேவை அல்லது கழிவறைகள் கட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட 1 கோடியே 75 லட்சம் ரூபாயை செலவழிப்பதிலும், வரையறுக்கப்பட்ட பணிகள், வரையறுக்கப்படாத பணிகள் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதன்படி, 1 கோடியே 75 லட்சத்தில் பாதி அளவான 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, வரையறுக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுமே செலவிட முடியும். மீதமுள்ள 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, வரையறுக்கப்படாத பணிகளுக்கு செலவழிக்கலாம் என்றாலும், அதிலும் சில பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.



வரையறுக்கப்பட்ட பணிகள்: அங்கன்வாடி கட்டடங்கள், சத்துணவுக் கூடங்கள், மதிய உணவு சமையலறைகள் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால், ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் இந்த பணிகளுக்காக தங்களது நிதியில் 20 லட்சம் ரூபாயை செலவிட வேண்டும். இதுதவிர, ஐந்து லட்சம் ரூபாயை, மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களுக்காகச் செலவிட வேண்டும். இதுபோக மீதமுள்ள 62.50 லட்சம் ரூபாயில், கிரேவல், மண் சாலைகளை மேம்படுத்துதல், மிகவும் சேதமடைந்த தார் சாலைகளில் குழிகளை மூடி சமன் செய்தல், அரசு மற்றும் உள்ளாட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், அரசு கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கட்டடங்கள் அல்லது காம்பவுண்ட் சுவர் கட்டுதல். அரசு அனாதை இல்லங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், பாலங்கள் கட்டுதல், கூடுதல் சுடுகாடு வசதிகள், புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் கச்சா வீடுகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு செலவிடலாம்.



வரையறுக்கப்படாத பணிகளில் தடை செய்யப்பட்டவை: மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றின் அலுவலக மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில், ரேஷன் கடைகள், நேரடி கொள்முதல் நிலையங்கள் கட்டுதல், ஆவின் மொத்த குளிரூட்டும் மையங்கள், மாநில போக்குவரத்துக் கழகங்களில் பஸ் டிப்போக்களில் கான்கிரீட் தளங்கள், ஷெட்கள், சுற்றுச்சுவர்கள் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து புதுப்பித்தல், பராமரிப்பு மற்றும் ரிப்பேர் வேலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், குடிசை மாற்று வாரியம் மற்றும் அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் சீரமைப்பு பணிகளை செய்ய விலக்கு அளிக்கப்பட்டது. ஆனாலும், இப்பணிக்காக ஒரு வீட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழிக்க முடியாது. அனைத்து நகரும் பொருட்கள், கருவிகள், பர்னிச்சர்கள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு பள்ளிகள், ஆதிதிராவிட பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், அரசு கல்லூரிகள், விடுதிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு பர்னிச்சர்கள், கருவிகள் வாங்கலாம். இதேபோல, அரசு போக்குவரத்துக் கழகங்களில் கண்டமான பழைய பஸ்களுக்கு பதிலாக சாதாரண புதிய பஸ்களை வாங்கவும், பஸ் டிப்போக்களில் பராமரிப்பு கருவிகளை வாங்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கான கருவிகளை வாங்கவும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், கழிவறைகள் போன்றவற்றை, 100 சதவீதம் தமிழ் வழியில் கற்றுத் தரும் அரசு பள்ளிகளில் மேற்கொள்ளலாம். ஆனால், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி கற்கும் பள்ளிகளில் இப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எந்த ஒரு பணியையும், ஒரு ஆண்டில் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளக் கூடாது. மேலும், ஒரு உதவி பெறும் பள்ளிக்கு, ஒரு பணியை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டால், அந்த பள்ளிக்கு வேறு எந்த திட்டத்தையும் மூன்று ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக் கூடாது. வர்த்தக நிறுவனங்கள் தொடர்புடைய எந்த பணியையும் மேற்கொள்ளக் கூடாது. மத்திய, மாநில அரசுகளின் நிவாரண உதவிகளுக்காக இதை செலவிடக்கூடாது. நில ஆர்ஜிதத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க பயன்படுத்தக் கூடாது. ஏற்கனவே செய்யப்பட்ட பணிகள் அல்லது பாதியில் நிற்கும் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. மத வழிபாடு தலங்கள் மற்றும் மத நம்பிக்கையுடைய அமைப்புகள் வைத்திருக்கும் இடங்களில் பணிகள் மேற்கொள்ளக்கூடாது. ஊரணிகள், குளங்கள், கால்வாய்கள் போன்றவற்றை தூர்வார பயன்படுத்தக்கூடாது. கிரேவல், மண் சாலைகள் அமைக்க பயன்படுத்தக் கூடாது. உயர் கோபுர விளக்குகள் அமைக்க பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு, எம்.எல்.ஏ.,க்கள் நிதியை பயன்படுத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீட்டில், 19 சதவீத நிதியை, ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் செலவிட வேண்டும் என்றும், நகர்ப்புறங்களில் குடிசை பகுதிகளில் செலவிட வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தான், எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது. பல எம்.எல்.ஏ.,க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளனர். குறிப்பாக, அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி., எம்.எல்.ஏ.,க்கள் இதை கண்டுகொள்வதில்லை. அதே நேரத்தில், பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், தாங்கள் ஒதுக்கும் பணிகள் துவங்குவதற்கு முன்னரே, அதற்குரிய கமிஷனை பெற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இவ்வாறு கமிஷன் பெறும் எம்.எல்.ஏ.,க்களை பொறுத்தவரை, எந்த பணியாக இருந்தாலும், தொகை அதிகரித்திருப்பதால், 'குஷி'யாக உள்ளனர்.







இவர்கள் சொல்வது என்ன? :





காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., அருள் அன்பரசு: தொகுதி வளர்ச்சி நிதியாக 2 கோடி ரூபாயாக உயர்த்தியது வரவேற்கத்தக்கது. கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.,வுக்கு ஒதுக்கப்பட்ட 1 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு வரையறுக்கப்பட்ட திட்டம், வரையறுக்கப்படாத திட்டம் என இரண்டு வகை இருந்தது. அப்படி இல்லாமல் எம்.எல்.ஏ.,வுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சுதந்திரமாக செலவு செய்ய அனுமதிக்க வேண்டும். அப்போது தான், தொகுதி மக்களின் குறைகளை முழுமையாகச் செயல்படுத்த முடியும். தற்போது உயர்த்தப்பட்ட 25 லட்சம் ரூபாயில் பள்ளிக்கூட கட்டடம், கழிவறை தான் கட்ட வேண்டும் என குறிப்பிட்டு சொல்லியிருப்பதால், அத்தொகை போதுமானதாக அமையாது. காரணம், ஒரு ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் வரை இருக்கும்போது, ஒரு ஊராட்சியின் பள்ளி கட்டடத்திற்கு குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியது வரும்போது 50 லட்சம் ரூபாய் தேவைப்படும்.



மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., டில்லிபாபு: பார்லிமென்ட், சட்டசபை உறுப்பினர்களுக்கு, தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்குவதை கைவிட வேண்டும். அத்தொகையை நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை. கடந்த ஐந்தாண்டுகளில் எனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகச் செலவிட்டு உள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியாக கடந்த முறை, ஆண்டுக்கு 1.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், கட்டாய ஒதுக்கீடு மற்றும் எம்.எல்.ஏ., விருப்ப ஒதுக்கீடு ஆகிய இரண்டு இனங்களிலும் முழுமையாகச் செலவிட்டுள்ளோம். தற்போது, தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், 25 லட்சம் ரூபாயை பள்ளிகளின் குடிநீர் மற்றும் கழிவறை வசதிக்கு செலவிட அறிவுறுத்தியுள்ளது, கிராமப்புற பள்ளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.



பா.பாஸ்கர்பாபு







      Our Apps Available On




      Dinamalar

      Follow us