சிலருக்கு ஏமாற்றம்; சிலருக்கு மகிழ்ச்சி
சிலருக்கு ஏமாற்றம்; சிலருக்கு மகிழ்ச்சி
சிலருக்கு ஏமாற்றம்; சிலருக்கு மகிழ்ச்சி
UPDATED : ஜூலை 13, 2011 05:40 PM
ADDED : ஜூலை 12, 2011 11:59 PM

புதுடில்லி:நேற்றைய மத்திய அமைச்சரவை மாற்றம், சிலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு வருத்தத்தையும் அளித்துள்ளது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிரதமரின் உத்தரவை ஏற்க மறுத்த, முகுல் ராய், ரயில்வே துறையில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜிவ் சுக்லா, பத்திரிகையாளராக இருந்து, அரசியலுக்கு வந்தவர். உ.பி., மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்களுடன், இயல்பாக பேசும் குணம் உடையவர்.நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்தில், சுக்லா, பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சராக, பதவியேற்றுள்ளார். அடுத்தாண்டு உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதை கருத்தில் கொண்டும், அனைத்து அரசியல் கட்சியினருடனும், நட்பு கொண்டிருப்பதை கருத்தில் கொண்டும், இவருக்கு, முக்கிய பதவியான, பார்லிமென்ட் விவகாரத் துறை அளிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தத்துவம் பேசும் கில்: மத்திய புள்ளியியல் துறை அமைச்சராக பதவி வகித்த எம்.எஸ்.கில், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர். டில்லி காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் காரணமாக, இவர், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து கில் கூறுகையில், ''அமைச்சர் பதவியில் இல்லாததை, மிகவும் வசதியாக இருப்பதாக கருதுகிறேன். பரபரப்பான சூழலில் இருந்து, விலகி இருப்பது நல்லது தான். பதவி என்பது, வரும், போகும்'' என, தத்துவாத்தமாக பதிலளித்தார்.
ஜெய்ராம் ரமேஷ் துறை மாற்றம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், இவரை பெரிதும் நேசித்தனர். மேலும், புலிகள் பாதுகாப்பில் மிகவும் ஆர்வம் காட்டினார்.தற்போது, அவர், வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக, புலிகளை பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகள், முன்பு போல், இனி தீவிரமாக செயல்படுத்தப்படுமா என, விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முகுல் ராய்க்கு அதிர்ச்சி: திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகுல் ராய், ரயில்வே இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார். ரயில்வே கேபினட் அமைச்சராக இருந்த மம்தா, மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றதால், தனக்கு ரயில்வே கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அசாமில் நடந்த ரயில் விபத்தை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்யும்படி, முகுல் ராய்க்கு, பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்த முகுல் ராய், ''ரயில்வே அமைச்சக பொறுப்பை, பிரதமர் மன்மோகன் சிங் தான், தற்போது கவனித்து வருகிறார். ரயில்வே துறைக்கு உள்ள மூன்று இணை அமைச்சர்களில், நானும் ஒருவன்'' எனக் கூறி, விபத்து நடந்த இடத்துக்கு செல்ல மறுத்து விட்டார்.
இந்நிலையில், நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்தில், முகுல் ராய்க்கு, பிரதமர் மன்மோகன் சிங், பதிலடி கொடுத்துள்ளார். ரயில்வே இணை அமைச்சர் பதவியில் இருந்து, கப்பல் துறை இணை அமைச்சர் பதவிக்கு, அவர் மாற்றப்பட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த் சேனாவுக்கு பதவி உயர்வு: ஒடிசா மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற காங்கிரஸ் தலைவரான ஸ்ரீகாந்த் சேனா, ஏற்கனவே, பார்லிமென்ட் விவகாரத் துறையின் கேபினட் அமைச்சராக இருந்த, அனுபவம் உடையவர். ஆனால், தற்போதைய ஐ.மு., கூட்டணி அமைச்சரவையில், உரத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.இது, அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், நேற்று அவர், புள்ளியியல் மற்றும் திட்டமிடல் துறைக்கு, தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.


