பிரிந்து வாழ முதுமையிலும் கோர்ட்டில் மோதும் தம்பதியர்
பிரிந்து வாழ முதுமையிலும் கோர்ட்டில் மோதும் தம்பதியர்
பிரிந்து வாழ முதுமையிலும் கோர்ட்டில் மோதும் தம்பதியர்
ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
மோகா : பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தைச் சேர்ந்த, பிரிந்து வாழும் 80 வயது தம்பதியினர், ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடுத்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டம், ஜானேர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்பான்ஸ் சிங், 80. இவரது மனைவி அமர்கவுர், 80. இவர்களுக்கு ஐந்து மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஹர்பான்ஸ் சிங்கிற்கும் அமர்கவுருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், குடும்பச் சண்டை ஏற்பட்டதில், அமர்கவுர், தன் தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். அதன் பின், கணவர் வீட்டிற்குத் திரும்ப வரவில்லை.
இந்நிலையில், 'வயதான காலத்தில் என் மனைவி என்னுடன் சேர்ந்து வாழ கோர்ட் உத்தரவிட வேண்டும்' என்று, ஹர்பான்ஸ் சிங், கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அமர்கவுரை விசாரணை செய்த போது, 'கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை' என்று மறுத்து விட்டார். மேலும், வேறு ஒரு கோர்ட்டில்,'தன் கணவருக்கு மாத வருமானம் 50 ஆயிரம் ரூபாய் என்பதால், என் செலவுகளுக்காக மாதம் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க கோர்ட் உத்தரவிட வேண்டும்' என்று வழக்கு தொடுத்தார். கவுர் தொடுத்த வழக்கில், ஆகஸ்ட் 4ம் தேதியன்றும், ஹர்பான்ஸ் சிங் தொடுத்த வழக்கில் செப்டம்பர் 6ம் தேதியும் விசாரணைக்கு வரவேண்டும் என்று, கோர்ட்டுகள் உத்தரவிட்டுள்ளன.