ADDED : செப் 17, 2011 09:37 PM
அரியலூர்: அரியலூர் அருகே, பள்ளி பஸ் கவிழ்ந்த விபத்தில், மாணவியர், ஆசிரியர்கள் உட்பட 55 பேர் காயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில், பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இப்பள்ளியைச் சேர்ந்த, 15 ஆசிரியர், 24 ஆசிரியை, 15 மாணவியர் ஆகியோர், திருச்சியில் நேற்று நடந்த ஈ.வெ.ரா., பிறந்த நாள் விழாவில் பங்கேற்க, பள்ளி பஸ்சில் சென்றனர். மீன் சுருட்டியைச் சேர்ந்த நவசீலன் பஸ்சை ஓட்டினார். ஜெயங்கொண்டம் - திருச்சி சாலையில், வி.கைகாட்டி ஓடை பாலம் அருகே, எதிரே வந்த மணல் லாரியின் முன்னால், டூ வீலரில் வந்த இருவர், நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதையடுத்து, லாரி டிரைவர் 'பிரேக்' போட்டு நிறுத்தினார். இதனால், எதிர்த் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த பள்ளி பஸ்சை, சாலை ஓரத்துக்குத் திருப்ப, டிரைவர் முயன்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நேற்று காலை, 9 மணிக்கு நடந்த இவ்விபத்து காரணமாக, காயமடைந்த டிரைவர் உட்பட, பஸ்சில் பயணம் செய்த 55 பேரும், அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயமடைந்த டிரைவர் உட்பட எட்டுப் பேர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரியலூர் எஸ்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர், அரியலூர் அரசு மருத்துவமனையில், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். விபத்து குறித்து, அரியலூர் சிமெண்ட் ஆலை போலீசார் விசாரிக்கின்றனர்.