/உள்ளூர் செய்திகள்/திருச்சி/"நானே சாக்கடை தள்ள வேண்டிய நிலை உள்ளது' : மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் "புலம்பல்"நானே சாக்கடை தள்ள வேண்டிய நிலை உள்ளது' : மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் "புலம்பல்
"நானே சாக்கடை தள்ள வேண்டிய நிலை உள்ளது' : மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் "புலம்பல்
"நானே சாக்கடை தள்ள வேண்டிய நிலை உள்ளது' : மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் "புலம்பல்
"நானே சாக்கடை தள்ள வேண்டிய நிலை உள்ளது' : மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் "புலம்பல்
ADDED : ஜூலை 13, 2011 02:21 AM
திருச்சி: திருச்சி மாநகராட்சி அவசரக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.
இதில், மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, துணைமேயர் அன்பழகன், கோட்டத்தலைவர்கள் பாலமுருகன், ஜெரோம் ஆரோக்கியராஜ், அறிவுடைநம்பி, கவுன்சிலர்கள் சீனிவாசன், ஜோசப் ஜெரால்டு, ராமமூர்த்தி, ஸ்ரீராமுலு, தங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும், திருக்குறள் வாசித்தலும் நடந்தது. அதன்பின், நேற்று முன்தினம் இறந்த தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டம் துவங்கியதும், மாநகராட்சியில் நீண்டகாலமாக அலுவலக உதவியாளர்களாக பணியாற்றிய 75 பேரை துப்புரவு பணியாளர் பணியில் அமர்த்திய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் பேசினர்.
ஜோசப் ஜெரால்டு (தே.மு.தி.க.,): மாநகராட்சியில் அலுவலக உதவியாளர்களாக பணியாற்றியவர்களை துப்புரவு பணியாளர்களாக நியமித்தது சரியல்ல. ஏற்கனவே துப்புரவு பணிக்காக இரண்டு ஆண்டுக்கு முன் 160 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டார்களே. அவர்கள் எங்கே உள்ளனர்?. தேர்வின் போதே அதிகம் படித்தவர்களை துப்புரவு பணிக்கு எடுக்கவேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், கேட்காமல் எடுத்து விட்டீர்கள்.
மூக்கன் (தி.மு.க.,): எனது வார்டில் 14 துப்புரவு பணியாளர் இருந்தனர். தற்போது எட்டு பேர் மட்டுமே உள்ளனர். அவர்களில் மூன்று பேர் காந்திமார்க்கெட் துப்புரவு பணிக்கு சென்று விடுகின்றனர். நானே சாக்கடை தள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கமிஷனர்: மாநகராட்சியில் 1,791 துப்புரவு பணியாளர் உள்ளதாக கணக்கு உள்ளது. அவர்கள் எல்லாம் வேலைபார்த்தால் போதும். முன் நியமனம் செய்யப்பட்டவர் எங்கே இருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க கட்சித்தலைவர்கள், உதவி கமிஷனர்கள் கூட்டம் கூட்டி முடிவு செய்வோம். இருப்பவர்களை கண்டுபிடித்து இல்லாத இடங்களுக்கு அனுப்புவோம். நாளையே (இன்று) அந்த கூட்டம் நடக்கும்.
கோட்டத்தலைவர் பாலமுருகன் (தி.மு.க.,): அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி துப்புரவு பணியாளர்களை எடுத்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு மட்டும் அக்கறையாக பணி உயர்வு வழங்கும் கமிஷனர், துப்புரவு பணியாளர்களிடம் பாராமுகம் காட்டியுள்ளார்.
கோட்டத்தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் (காங்கிரஸ்): துடைப்பத்தை பிடிக்கத் தெரியாதவர்களை எல்லாம் துப்புரவு பணியாளர்களாக தன்னிச்சையாக முடிவு செய்து, தவறான ஆட்களை தேர்வு செய்தீர்கள். அது வருத்தமளிக்கிறது. மீண்டும் தனியாரிடம் துப்புரவு பணிகளை ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் மாநகர் தூய்மையாகும். இவ்வாறு விவாதம் நடந்தது. துப்புரவு பணியாளர் பற்றிய விவாதம் நடந்தபோது கடந்த ஆட்சியில் நடந்தவை குறித்தும், புதிய ஆட்சியில் நடப்பவை குறித்தும் தி.மு.க., அ.தி.மு.க., உறுப்பினர்கள் பேசியது, கூட்டத்தில் சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.


