Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவையில் ஆக., 1ல் ஏ.ஜே.கே., யூத் மீட் - 2011 : அப்துல் கலாம் பங்கேற்பு

கோவையில் ஆக., 1ல் ஏ.ஜே.கே., யூத் மீட் - 2011 : அப்துல் கலாம் பங்கேற்பு

கோவையில் ஆக., 1ல் ஏ.ஜே.கே., யூத் மீட் - 2011 : அப்துல் கலாம் பங்கேற்பு

கோவையில் ஆக., 1ல் ஏ.ஜே.கே., யூத் மீட் - 2011 : அப்துல் கலாம் பங்கேற்பு

ADDED : ஜூலை 24, 2011 02:39 AM


Google News

கோவை : கோவை அருகே நவக்கரை ஏ.ஜே.கே., கல்வி நிறுவன வளாகத்தில், வரும் ஆக., 1ல் 'ஏ.ஜே.கே.,யூத் மீட் - 2011' நிகழ்ச்சி நடக்கிறது.

ஏ.ஜே.கே., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் அஜீத்குமார் லால்மோகன் கூறியதாவது: கல்லூரி மாணவ,மாணவியர் மற்றும் இந்தாண்டு பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்காக எங்கள் கல்வி நிறுவன வளாகத்தில் வரும் ஆக., 1ல் 'ஏ.ஜே.கே., யூத் மீட் - 2011' என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன்,கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் கருணாகரன், அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் ஷீலா, கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் ராமச்சந்திரன்தெக்கேதத், ஏ.ஜே.கே., கல்வி நிறுவனங்களின் தாளாளர் லால்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்தியாவில், 120 கோடி மக்கள்தொகையில் 60 சதவீதத்தினர் இளைஞர்கள். இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களை நம்பி உள்ளது. இளைஞர்களுக்கு தரமான கல்வி, ஒழுக்கம், கடின உழைப்பின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைப்பதன் மூலம், எதிர்காலத்தில் அவர்களை சாதனையாளர்களாக மாற்ற முடியும்.

இளைஞர்களை சிறந்த குடிமகன்களாக உருவாக்கும் பொறுப்பு கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது. கல்வி மற்றும் திறமை கொண்ட இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களை நல்ல முறையில் வழிநடத்துவதன் மூலம் நாடு முன்னேறும்.

கடந்த 40 ஆண்டுகளில் அணுசக்தித்துறை உள்பட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளோம். உலகமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் இன்றைய இளைஞர்கள் முன்னேற அதிக வாய்ப்புகள் இருந்த போதும் அனைத்து துறைகளிலும் கடினமான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.

நகர்ப்புற மாணவ, மாணவியருடன் ஒப்பிடும்போது கிராமப்புற மாணவ, மாணவியரின் வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. கட்டமைப்பு, தரமான கல்வி உள்ளிட்ட மேம்பாடு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், அவர்களும் நகர்ப்புற மாணவ, மாணவியரின் வளர்ச்சிக்கு இணையாக முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் உள்பட கிராமப்புற பகுதிகளில் படித்து, பல உயரிய பதவிகளை வகித்தவர்கள் பலர் உள்ளனர். கிராமப்புறங்கள் வளராவிட்டால் நாடு வளர்ச்சி பெறாது. வாழ்வில் வெற்றி பெற கல்வி மட்டும் போதாது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறை இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியாகவே, யூத் மீட் - 2011 நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மூன்றாயிரம், கேரள மாநில கல்லூரிகளில் இருந்து இரண்டாயிரம் பேர் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 15 ஊராட்சி தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் கல்லூரி மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் 0422 322 5252, 323 6770 என்ற தொலைபேசி எண்களிலும் www.ajkcas.com http://www. ajkim.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us