Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கல்வி பெறும் உரிமை சட்ட வரம்பிற்குள் எல்.கே.ஜி.,யை கொண்டுவர திட்டம்

கல்வி பெறும் உரிமை சட்ட வரம்பிற்குள் எல்.கே.ஜி.,யை கொண்டுவர திட்டம்

கல்வி பெறும் உரிமை சட்ட வரம்பிற்குள் எல்.கே.ஜி.,யை கொண்டுவர திட்டம்

கல்வி பெறும் உரிமை சட்ட வரம்பிற்குள் எல்.கே.ஜி.,யை கொண்டுவர திட்டம்

ADDED : ஜூலை 24, 2011 02:41 AM


Google News

புதுடில்லி : நான்கு முதல் ஆறு வயதுள்ள குழந்தைகளுக்கு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கும் வகையில், எல்.கே.ஜி.,யை கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, கல்வி பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதன்படி, 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தற்போது இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்படுகிறது. இதில், ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய கே.ஜி., எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகள் அடங்காது. இந்நிலையில், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கே.ஜி., உள்ளிட்ட வகுப்புகளைக் கொண்டு வருவதற்காக, திட்ட கமிஷனின் ஒரு பிரிவாக துணைக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்குழு, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் வரம்புகளை அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகரிக்கும் வகையில், ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம், மனித வள மேம்பாட்டுத் துறையால் ஏற்படுத்தப்பட்ட மத்திய கல்வி ஆலோசனை குழுவின் துணைக் குழு, 10ம் வகுப்பு வரையிலான, உயர்நிலைப் பள்ளி கல்வி நிலை குறித்து ஆராய்ந்து, அதில், எல்.கே.ஜி., கல்வியைச் சேர்க்க சட்டத்தில் இடம் உள்ளதா என ஆய்வு செய்தது.

இதுகுறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ், கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் இறுதி முடிவை, இம்மாத இறுதியில் பிரதமர் மன்மோகன் சிங் எடுப்பார் என்று தெரிய வருகிறது. மேலும், ஆறு வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கு எல்.கே.ஜி., கல்வி திட்டத்தை செயல்படுத்த, ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 4 முதல் 6 வயதுள்ள குழந்தைகளைச் சேர்த்து கல்வி எல்லையை விரிவுபடுத்த, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள எல்.கே.ஜி., கல்வித் திட்டத்தை பலப்படுத்துவதற்கு தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கற்பிக்க வேண்டிய பாடங்கள், குழந்தைகளின் கற்றல் வயது, ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆகியவை வரையறுக்கப்பட்டு, குழந்தை பருவம் மற்றும் எல்.கே.ஜி., கல்வித் திட்டத்தில் அவற்றை அளிப்பதை தேசிய கொள்கையாக, தேசிய ஆலோசனைக் குழு கருதுகிறது. நான்கு வயதில் எல்.கே.ஜி., கல்வியை குழந்தைகளுக்கு அளிப்பது ஏற்புடையது என்று, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை கருதுகிறது.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, எல்.கே.ஜி., கல்வித் திட்டத்தை விரிவாக்கம் செய்து, அமல்படுத்துவதில் நிதி நெருக்கடி மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த திட்டத்தின்படி, 4 கோடி குழந்தைகள் இலவச, கட்டாயக் கல்வி பெறுவர். இதற்கு 10 லட்சம் வகுப்பறைகள் தேவை. பயிற்சி பெற்ற 10 லட்சம் நர்சரி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us