Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சாய ஆலைகளை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்: 10 ஆயிரம் தொழிலாளர்கள் திரண்டனர்

சாய ஆலைகளை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்: 10 ஆயிரம் தொழிலாளர்கள் திரண்டனர்

சாய ஆலைகளை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்: 10 ஆயிரம் தொழிலாளர்கள் திரண்டனர்

சாய ஆலைகளை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்: 10 ஆயிரம் தொழிலாளர்கள் திரண்டனர்

UPDATED : ஜூலை 28, 2011 08:55 AMADDED : ஜூலை 28, 2011 01:03 AM


Google News

திருப்பூர் : திருப்பூரில் மூடப்பட்டுள்ள சாய, சலவை ஆலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொழில் பாதுகாப்பு குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். திருப்பூரில் உள்ள 734 சாய, சலவை ஆலைகள், 20 பொது சுத்திகரிப்பு நிலையங்கள், 146 தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள், ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதனால், பனியன் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் பனியன் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி, தொழில் பாதுகாப்பு குழு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.



சாய சலவை ஆலைகளை திறக்க வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்பிரமணியம், தொழில் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் ராமசாமி, பழனிசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வரவேற்றார். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமையில், தொழில் பாதுகாப்பு, சாயப்பிரச்னைக்கு தீர்வு, தொழிலாளர் நலன் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.



தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கி÷ஷார்குமார் பேசியதாவது: பனியன் தொழில் மூலமாக, மத்திய, மாநில அரசுகள் கணிசமான வரி வருவாய் பெறுகின்றன. அரசு, நமக்கு உதவவில்லை. முதலாளியும், தொழிலாளியும் சேர்ந்து பனியன் தொழிலுக்காக இன்று ஒற்றுமையுடன் இங்கு கூடியுள்ளோம்.நீதிமன்ற உத்தரவுக்கு தலை வணங்குகிறோம். ஆனால், மாசுபடுவதை கட்டுப்படுத்த மறந்து விட்டு, இன்று தொழிலை கட்டுப்படுத்துவது போன்ற சில அதிகாரிகளின் நடவடிக்கைகளை எதிர்க்கிறோம். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, மீண்டும் திருப்பூர் மண்ணில் போராட்டம் நடக்காத வகையில், சாய ஆலைகளை திறந்து, தொழில்முனைவோரையும், தொழிலாளர்களையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும், என்றார்.



திருப்பூர் கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம், சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்கம், மாநகராட்சி கடை வியாபாரிகள் உரிமையாளர்கள் சங்கம், மின்சாதன பொருட்கள் விற்பனையாளர் சங்கம், உழவர் சந்தை காய்கறி வியாபாரிகள், தையல் கலைஞர்கள் சங்கம், காஜா பட்டன் உரிமையாளர் சங்கம், சிறு பனியன் உற்பத்தியாளர் சங்கம், கேபிள் 'டிவி' ஆபரேட்டர் சங்கம், காதர்பேட்டை பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும், போராட்டத்தை விளக்கி பேசினர்.



மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, எம்.ஜி.ஆர்., சிலை வரையில் உள்ள வளர்மதி ரோட்டில் தொழிலாளர்கள் திரளாக நின்றிருந்தனர்; பெண்கள் அமர்ந்திருந்தனர். திருப்பூர் பகுதி வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழில் துறையினர், தொழிலாளர்கள், பொதுமக்கள் என 3,000 பெண்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us