ADDED : அக் 01, 2011 11:41 PM

காபூல்: ஹக்கானி பயங்கரவாதக் குழுவின் மூத்த தலைவரும், தளபதியுமான ஹாஜி மாலி கான் என்பவரை 'நேட்டோ' படையினர் நேற்று கைது செய்தனர்.
ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் ஹக்கானி குழுவுக்கும் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.,க்கும் இடையில் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. அதனால், பாக்., அமெரிக்கா இடையிலான உறவு மிகச் சிக்கலானது. இந்நிலையில், ஹக்கானி குழுவின் மூத்த தலைவரும், தளபதியும், ஹக்கானி குழுத் தலைவர் சிராஜ் ஹக்கானியின் மாமாவுமாகிய ஹாஜி மாலி கான் என்பவரை ஆப்கனின் பாக்டியா மாகாணத்தில் நேற்று 'நேட்டோ'வின் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையினர் (ஐ.எஸ்.ஏ.எப்.,) கைது செய்தனர். ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் இவருக்குத் தொடர்பிருப்பதாகவும், பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. பாகிஸ்தானி தலிபான் தலைவர் பைதுல்லா மசூத்துக்கும், சிராஜூக்கும் இடையில் இவர் தூதராகச் செயல்பட்டு வந்தார். ஆப்கன் அதிகாரிகள் இவரை ஹக்கானி குழுவின் மூளை என்று குறிப்பிட்டுள்ளனர். கானின் கைது குறித்து ஐ.எஸ்.ஏ.எப்., வெளியிட்டுள்ள அறிக்கையில்,'ஹக்கானி குழு மீதான தேடல் நடவடிக்கைகளில் இந்த கைது குறிப்பிடத்தக்க மைல் கல்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


