/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/மாடு மேய்க்கிறார் கல்லூரி விரிவுரையாளர்: வேலை கிடைக்காததால் அவலம்மாடு மேய்க்கிறார் கல்லூரி விரிவுரையாளர்: வேலை கிடைக்காததால் அவலம்
மாடு மேய்க்கிறார் கல்லூரி விரிவுரையாளர்: வேலை கிடைக்காததால் அவலம்
மாடு மேய்க்கிறார் கல்லூரி விரிவுரையாளர்: வேலை கிடைக்காததால் அவலம்
மாடு மேய்க்கிறார் கல்லூரி விரிவுரையாளர்: வேலை கிடைக்காததால் அவலம்
'கல்லூரி விரிவுரையாளர் சுரேஷ் வீடு எது?' என்று தொப்பியம்பாளையம் கிராமத்து டீக்கடையில் அமர்ந்திருந்த முதியவரிடம் கேட்டால், அவருக்கு தெரியவில்லை. அருகில் பேப்பர் படித்தபடி அமர்ந்திருந்த மற்றொருவர், 'அதான் அந்த காலேஜூக்கு வாத்தியாரா போனாரல்ல...அவரதான் கேக்குறாக...இப்பிடியே நேரா போய் வடக்க திரும்புனா மொத வீடு அந்த தம்பி வீடுதான். இப்ப வந்திருக்க மாட்டாரு. காலம்பற மாட்ட ஓட்டிட்டு தெக்க போனத பாத்தேன்...' என விலாவாரியாக விளக்கம் அளிக்கிறார்.
ஜீரணிக்க முடியவில்லை என்றாலும், அவர் கூறியது உண்மைதான். கோவை அரசு கல்லூரியில் நான்கு ஆண்டுகள் கவுரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த சுரேஷ் எனும் அந்த கிராமத்து இளைஞருக்கு, இந்த ஆண்டு பணிபுரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் மாடு மேய்த்து வருகிறார். புவியியலை பிரதான பாடமாக கொண்டு எம்.பில்., வரை படித்துள்ள இவர், 2006 முதல் 2010 வரை கோவை அரசு கலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர் ஆக பணிபுரிந்து வந்தார். இதே வேலையில் தொடரலாம் என நினைத்திருந்த இந்த இளைஞருக்கு, நடப்பாண்டில் கவுரவ விரிவுரையாளர் பணியில் சேர்வதற்கான அரசாணை வரவில்லை. தனியார் கல்லூரிகளில் சேரலாம் என்றால் அங்கு புவியியல் படிப்பே இல்லை.
அடுத்தபடியாக என்ன செய்வது என தெரியாமல் தவித்த சுரேஷ், ஓரிரண்டு நாட்கள் வீட்டில் சும்மா இருந்து பார்த்தார். நான்கு மாடுகளையும் கட்டி இழுத்து மேய்த்து வரும் அம்மாவும், தறிப்பட்டறைக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு இரவில் சோர்வுடன் வரும் வயதான அப்பாவும் அவரது மனதை உலுக்கினர். போதாக்குறைக்கு, காலை முதல் மதியம் வரை மில் வேலைக்கு சென்று விட்டு, அப்படியே பிற்பகலில் அரசுக் கல்லூரியில் எம்.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வரும் தம்பியும் மனதை உறுத்த, மாடு மேய்த்தாவது தன்னால் ஆன உதவியை செய்வது என முடிவு செய்தார். இப்போது மாடு மேய்ப்பதுதான் இந்த கல்லூரி விரிவுரையாளரின் முழு நேர வேலை. வீட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை மாடுகளை அழைத்துச் சென்று, மாலை வரை மேய விட்டு அழைத்து வருகிறார். இவர், கல்லூரி விரிவுரையாளருக்கான மாநில தகுதித் தேர்வு(செட்),தேசிய தகுதித் தேர்வுகளுக்கும்(நெட்) தயார் செய்து வருகிறார்.மாடுகள் தொலைதூரம் சென்று விடாமலிருக்க, அதன் முன் இரண்டு கால்களையும் கயிற்றால் கட்டி விட்டு மேய விடுகிறார். அருகில் ஏதாவது ஓரிடத்தில் அமர்ந்தபடி தகுதித் தேர்வுக்கான புத்தகங்களை படித்து வருகிறார்.
சுரேஷ் கூறியதாவது: 3.10.2006 முதல் 2010 வரை கவுரவ விரிவுரையாளராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. முதலில் 4,000 ரூபாய் சம்பளம் தந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து 6,000 ரூபாய் ஆக உயர்த்தியுள்ளனர். இந்த ஆண்டு இன்னும் அரசாணை வரவில்லை என்பதால் விண்ணப்பிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கவுன்சிலிங் நடந்ததால், சுமார் 200 கவுரவ விரிவுரையாளர்களை முந்தைய அரசு வீட்டுக்கு அனுப்பி விட்டது.
கவுன்சிலிங் முடிந்த பின் காலிப் பணியிடம் இருந்தும் வாய்ப்பு அளிக்கவில்லை. இதனிடையே, 'செட்/நெட் மற்றும் பி.எச்.டி., தகுதி உள்ளவர்கள் மட்டுமே இனி விரிவுரையாளராக பணிபுரிய முடியும்' என பல்கலை மானியக்குழு(யு.ஜி.சி.,) புதிய உத்தரவிட்டுள்ளது. நெட் தேர்வை இதுவரை பல முறை எழுதியும் தேர்வாகவில்லை.இதனால், 'என்றாவது நிரந்தர விரிவுரையாளர் பணி கிடைக்கும்' என காத்திருந்த கவுரவ விரிவுரையாளர்கள், இன்று தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எப்படியும் அரசு கல்லூரியில் விரிவுரையாளராகி விட வேண்டும் என்ற லட்சியத்துடன், மாடு மேய்த்தபடி செட்/நெட் தேர்வுக்கு படித்து வருகிறேன், என்றார் சுரேஷ்.
'இவ்வளவு படித்து விட்டு மாடு மேய்ப்பது கவுரவ குறைச்சலாக இல்லையா...? என கேட்டதற்கு, சுளிரென்று பதில் வருகிறது சுரேஷிடமிருந்து. ''இதுல என்னங்க கவுரவக் குறைச்சல்? என்ன.. இந்த வயசுல நம்மை படிக்க வச்சு ஆளாக்குன வயசான பெத்தவங்களை உக்கார வச்சு நாம சாப்பாடு போடணும். ஆனா 31 வயசாகியும் என்னை உக்கார வச்சு அவங்க சாப்பாடு போடறாங்க. அத நினைச்சாதான் மனசுக்கு சங்கடமா இருக்கு. சரி...மாடு மேய்ச்சாவது நம்மால ஆன சப்போர்ட் பண்ணுவோம்னு வெட்கத்தைப் பார்க்காம செய்றேன்...'' கண்களில் எட்டிப் பார்க்கும் கண்ணீர் துளிகளை துடைத்தபடி மாடுகளை வீட்டை நோக்கி ஓட்டிச் சென்றார் அந்த ஏழை விரிவுரையாளர்.
சுரேஷ் போன்ற இளைஞர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட காரணம், கல்லூரி விரிவுரையாளர் தேர்வு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தெளிவான கொள்கை இல்லாததுதான். ஆகவே அரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர விரிவுரையாளர் பணி கிடைப்பது வரை, கருணை அடிப்படையிலாவது விரிவுரையாளர்களாக பணியமர்த்த வேண்டும். 'நாங்கள் பாழாய் போனோம்' கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு, பி.எச்.டி., முடித்திருந்தால் 9 மதிப்பெண், கற்பித்தல் அனுபவத்துக்கு 15 மதிப்பெண், நெட்/ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண், நெட் தகுதியுடன் எம்.பில்., முடித்திருந்தால் 6 மதிப்பெண், நேர்காணலுக்கு 10 மதிப்பெண் என, ஆசிரியர் தேர்வாணையம் நிர்ணயித்துள்ளது. தனியார் கல்லூரியில் பணிபுரிபவர்கள், பணிபுரிந்து கொண்டே பி.எச்.டி., முடிக்க கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கிறது.
பிற பல்கலைகளிலும் இதற்கு அனுமதி உண்டு. கோவை பாரதியார் பல்கலையில் மட்டும் இதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளராக பணிபுரிந்த சுரேஷ் போன்றவர்களால் பி.எச்.டி., முடிக்க முடியவில்லை. கவுரவ விரிவுரையாளர்களிடம் படித்த மாணவர்களில் சிலர், இன்று பி.எச்.டி., முடித்து விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
கவுரவ விரிவுரையாளர்கள் சிலர் கூறியது: 2006ல் விரிவுரையாளராக பணியில் சேரும்போது 'எம்.பில்., தகுதி மட்டும் போதும்' என்றனர். அதை நம்பி பணியில் சேர்ந்தோம். பணியில் சேர்ந்தபின் பி.எச்.டி., முடிக்க அனுமதித்திருந்தால், 2010ல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய நியமனத்தில் எங்களுக்கும் வேலை கிடைத்திருக்கும்.
இன்று நான்கு ஆண்டுகள் வீணானதுதான் மிச்சம். அனுபவ சான்றிதழும் தர மறுக்கின்றனர். இதனால் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு விண்ணப்பிக்கக் கூட தகுதியற்றவர்களாக நிற்கிறோம். நாங்கள் பாழாய் போக பாரதியார் பல்கலைதான் காரணம். அப்பல்கலை மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும், என்றனர்.-வீ.எம்.பாபு-