தேசிய அடையாள அட்டை படம் எடுக்கும் பணி
தேசிய அடையாள அட்டை படம் எடுக்கும் பணி
தேசிய அடையாள அட்டை படம் எடுக்கும் பணி
ADDED : செப் 09, 2011 01:43 AM
ஈரோடு: தேசிய அடையாள அட்டைக்கு படம் எடுக்கும் பணி, போதிய விளம்பரமின்றி
முடங்கி வருகிறது.தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கீட்டை தொடர்ந்து, ஒவ்வொரு
தனி நபருக்கும், அவர்களது விபரம் முழுமையாக அடங்கிய வகையில் தேசிய அடையாள
அட்டை வழங்க திட்டமிடப்பட்டது. தேசிய அளவில் பல்வேறு பகுதிகளில் இப்பணி
நடக்கிறது.ஈரோடு மாநகராட்சிப்பகுதியில் ஜூலை 20 முதல் இப்பணி நடக்கிறது.
ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு தனித்தனியாக புகைப்படம், ஐந்து விரல்களின்
ரேகைப்பதிவு, இரு கண் கருவிழிகள் ஸ்கேன் செய்யப்படுகிறது. நமது பெயர்,
வயது, இனம், விலாசம், தொழில் போன்ற விபரங்கள் அடங்கிய விண்ணப்பம்,
அப்பதிவுடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த பதிவுகள் மத்திய அரசின்,
தேசிய அடையாள அட்டை சேகரிப்பு மையத்துக்கு சென்று, அங்கு 15 இலக்க எண்
வழங்கப்பட்டு, இரண்டு மாதத்துக்குள் நமது விலாசத்துக்கு பதிவு தபால் மூலம்
அனுப்பி வைக்கப்படும்.புகைப்படம் எடுக்க வருவோர் ரேஷன் கார்டு, வாக்காளர்
அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட ஏதாவது
ஒன்றின் நகலை எடுத்து வர வேண்டும்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளுக்கும் ரேஷன் கார்டு, பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றின் ஜெராக்ஸ்
எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் இப்பணி செய்ய ஐந்து முதல் 10
நிமிடங்கள் ஆகிறது.வார்டு வாரியாக அந்தந்த பகுதியில் மக்கள் வந்து,
அமர்ந்து, புகைப்படம் எடுக்க வசதியான இடம் தேர்வு செய்து, அங்கு பத்து
நாட்கள் முகாம் நடத்தப்படும்.தற்போது, சூரம்பட்டி உட்பட சில இடங்களில் இப்பணி நடந்தாலும், போதிய
விளம்பரம், எந்த இடத்தில், எத்தனை நாட்கள் நடக்கிறது என, தெரிவிக்காமல்
உள்ளனர். சூரம்பட்டி சாந்தான்கருக்கு பகுதியில், துப்புரவுப்பணியாளர்கள்
மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அப்பணியாளர்களிடம் இதுபற்றி கேட்டபோது,
''எங்களுக்கு படம் எடுக்கும் பணிக்கான கருவி, உபகரணங்கள் வழங்கி உள்ளனர்.
விளம்பரத்துக்கு நிதி ஏதுமில்லை,'' என்றனர்.ஒவ்வொரு பகுதியில் இவர்கள் படம்
எடுக்கச் செல்லும் முன், அப்பகுதியில் உள்ள முக்கிய நுழைவு ரோடுகளில்
பிளக்ஸ் போர்டு, பேனர்கள் கட்டலாம். பொது அமைப்புகள் மூலம் பிட் நோட்டீஸ்
அச்சடித்து வீடுதோறும் விநியோகிக்கலாம். துப்புரவுப்பணியாளர்கள்,
சத்துணவுப்பணியாளர், வி.ஏ.ஓ., கவுன்சிலர்கள் மூலமும், மைக் மூலமும்
அறிவிப்பு செய்யலாம்.நல்ல திட்டம், போதிய விளம்பரமின்றி முடங்கி வருகிறது.


