தாலிக்கு தங்கம் திட்டம் : வங்கிகள் முலம் தங்க நாணயங்கள் பெற முடிவு
தாலிக்கு தங்கம் திட்டம் : வங்கிகள் முலம் தங்க நாணயங்கள் பெற முடிவு
தாலிக்கு தங்கம் திட்டம் : வங்கிகள் முலம் தங்க நாணயங்கள் பெற முடிவு
UPDATED : ஜூலை 15, 2011 12:08 AM
ADDED : ஜூலை 14, 2011 11:20 PM

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு, முதல்வரின் தங்கம் வழங்கும் திட்டத்துக்காக, பொதுத் துறை வங்கிகள், ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய போன்றவற்றிடம் இருந்து, 'டெண்டர்' மூலம், தங்கக் காசுகள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கம் விலையில் அவ்வப்போது மாற்றம் இருப்பதால், 60 நாட்களுக்கு ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தங்கம் பெற, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் திருமண நிதியுதவித் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஐந்து பெயர்களில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்துடன், திருமணத்துக்காக தாலிக்கு நான்கு கிராம் தங்கமும் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கியுள்ளார். இதேபோல, பட்டம் பெற்ற, பட்டயம் படித்த பெண்களுக்கு, 25 ஆயிரத்தில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக நிதியுதவியை உயர்த்தியும், அவர்களுக்கும், நான்கு கிராம் தங்கம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, திருமாங்கல்யம் செய்ய நான்கு கிராம், 22 காரட் தங்கம் வழங்கப்படுகிறது. இந்த தங்கத்தை கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகளை, சமூக நலத் துறை இயக்குனரகம் தற்போது வகுத்துள்ளது. இதன்படி, 'திருமாங்கல்யத்துக்கான' தங்கம், காசு வடிவில் வழங்கப்படும். இதன் மூலம், அந்தந்த பயனாளிகளின் மரபுகள் மற்றும் வழக்கங்களின்படி இந்த தங்கக்காசுகளை மாங்கல்யமாக செய்து கொள்ள முடியும்.
இந்த தங்க காசுகளின், ஒரு பக்கத்தில் தமிழக அரசு சின்னம் இடம்பெற்று இருக்கும். அதன் மற்றொரு புறம், தங்கத்தின் தரம், எடை மற்றும் ஹால்மார்க் விவரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் புடைக்கப்பட்ட பகுதியில், தமிழக முதல்வரின் உருவத்துடன், 'ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு முதலமைச்சரின் தங்கம் வழங்கும் திட்டம்' என பொறிக்கப்பட்டிருக்கும். அரசு சின்னம் பொறிக்கப்பட்ட இடத்தில், 'தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை' என்ற தலைப்பு இடம்பெற்று இருக்கும். அதன்பின் பகுதியில், 'திருமண நிதி உதவித் திட்டம் 2011' என்று தமிழில் அச்சிடப்பட்டு இருக்கும். தங்கம் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், பொதுத் துறை நிறுவனங்கள், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அதன் சார்பு வங்கிகளில் தங்கம் வாங்குவதே, அதன் சுத்தம், சரியான எடை மற்றும் உரிய நேரத்தில் வினியோகம் போன்றவற்றை உறுதிப்படுத்த முடியும். பொதுத்துறை வங்கிகள், 24 காரட் தங்க காசுகளை, வெவ்வேறு எடைகளில் விற்பனை செய்ய, ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. ஆனால், நான்கு கிராம் சரியான எடையை உறுதி செய்ய வேண்டுமென்றால், பெரிய, 'மின்ட்' உற்பத்தியாளர்களிடம் தான் வாங்க வேண்டும். எனவே, பொதுத் துறை வங்கிகளிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், 22 காரட் தங்கக் காசுகளை நான்கு கிராம் எடையில் தருவதற்கு சம்மதித்தன. இதனால், தங்கக் காசுகளை பொதுத் துறை வங்கிகள், ஸ்டேட் வங்கிகளிடம் டெண்டர் முறையில் தங்கக் காசுகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருப்பதால், பொதுத்துறை வங்கிகள் தங்கத்தின் விலையுடன், செய்கூலி, பேக்கிங் செய்யும் கட்டணம், இன்சூரன்ஸ், போக்குவரத்து செலவு மற்றும் இதர வரிகளையும் சேர்த்து மொத்தமாக விலையை குறிப்பிட வேண்டும்.
அந்த விலையில், 60 நாட்களுக்கு மாற்றம் செய்யக் கூடாது. டெண்டரை திறக்கும் சமயத்தில், சந்தையில் தங்கம் விலை, அவர்கள் குறிப்பிட்டிருந்த விலையை விட மிகவும் குறைந்தால், சமூக நலத் துறை இயக்குனர், டெண்டரில் குறைந்த விலையை குறிப்பிட்டிருந்த வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். விலையை குறைக்க வங்கி நிர்வாகம் மறுத்தால், புது டெண்டரை இயக்குனர் அறிவிப்பார்.
மாவட்ட சமூக நல அலுவலர்கள், திட்டத்தின் கீழ் பயன் பெறுவோரின் எண்ணிக்கையை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்ய வேண்டும். அதனடிப்படையில், 60 நாட்களுக்கான தேவை கணக்கிடப்பட்டு, டெண்டர் விடப்படும். தங்கக் காசுகளை, அந்தந்த வங்கியின் மாவட்ட தலைமை கிளையில் வினியோகிக்க வேண்டும். விலையை, 60 நாட்களுக்கு மாற்றக் கூடாது. 60 நாட்கள் என்றாலும், காசுகள் சப்ளை செய்தல் மற்றும் அதற்கு பணம் செலுத்துதல் போன்றவை மாதாந்திர அடிப்படையில் நடக்க வேண்டும்.
டெண்டர்களை, சமூக நலத் துறை இயக்குனர் வெளியிடுவார். எனினும், சமூக நலத் துறையில் இரண்டு துணை இயக்குனர்கள், அதன் முதன்மை கணக்கு அதிகாரி, இந்திய உலோகம் மற்றும் கனிமங்கள் வர்த்தக கழகத்தின் பிரதிநிதி, தமிழ்நாடு கைவினை பொருள்கள் மேம்பாட்டுக் கழக தலைவர், நிதித் துறையில் இணைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத ஒருவர் ஆகியோரை கொண்டு டெண்டர் பரிசீலனைக் குழு அமைக்கப்படுகிறது.
திருமண நிதி உதவியாக, 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு, மாவட்ட சமூக நல அலுவலர், பயனாளிகளின் பெயரில் காசோலையாக கொடுப்பார். வங்கிகள், தங்கக் காசுகளை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கொடுக்க வேண்டும். காசோலையும், தங்கக் காசும், கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கலெக்டர் முன்னிலையில், குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படும் திங்கள்கிழமைகளில் வழங்கப்படும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம் : 'அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்' பெயர் மாற்றம் செய்யப்பட்டு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஐந்து வகையான திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 'மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், ஏழை விதவைகளின் பெண் குழந்தைகளுக்கான ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், அனாதை பெண்களுக்கான அன்னை தெரசா நினைவு திருமண உதவி திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்' ஆகிய திட்டங்கள் இவை. இதில், 'அஞ்சுகம் அம்மையார்' பெயரிலான திட்டம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் பெயரில் துவக்கப்பட்டது. தற்போதைய அரசு இத்திட்டத்தின் பெயரை மாற்றி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்' என்று பெயரிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள இந்த திட்டத்துடன், அஞ்சுகம் அம்மையார் பெயரிலான திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -


