கோர்ட் புறக்கணிப்பை தவிருங்கள் : ஐகோர்ட் நீதிபதி "அட்வைஸ்'
கோர்ட் புறக்கணிப்பை தவிருங்கள் : ஐகோர்ட் நீதிபதி "அட்வைஸ்'
கோர்ட் புறக்கணிப்பை தவிருங்கள் : ஐகோர்ட் நீதிபதி "அட்வைஸ்'
ADDED : ஆக 22, 2011 12:41 AM

தர்மபுரி : ''கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவதை வழக்கறிஞர்கள் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்'' என்று, ஐகோர்ட் நீதிபதி பழனிவேலு, வழக்கறிஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தர்மபுரியில், புதிய விரைவு கோர்ட்டை,நேற்று துவக்கி வைத்து நீதிபதி பழனிவேலு பேசியதாவது: வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழகத்தில் புதிதாக, 50 விரைவு கோர்ட்டுகள் துவக்கப்பட்டுள்ளன.
மாவட்ட கோர்ட்டுகளில், ஒருங்கிணைந்து வழக்குகளைப் பெற்று நடத்தி வந்த நிலையில், புதிதாக துவக்கப்பட்டுள்ள விரைவு கோர்ட்டுகளில், வழக்கு விசாரணைகளை விரைந்து நடத்தி தீர்வு காணப்படும். வழக்கறிஞர்கள், தங்கள் கோரிக்கைகளை அரசு அல்லது நீதித்துறைக்கு முதலில் தெரிவித்து, கால அவகாசம் வழங்க வேண்டும். பின்னரே, தங்கள் உணர்வை வெளிப்படுத்தலாம். கூடுமானவரை, கோர்ட் புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவதைத் தவிர்த்தால், வழக்கு விசாரணைகள் விரைந்து முடிக்கப்படும். இந்திய அரசியல் அமைப்புப்படி, முக்கிய மூன்று தூண்களான பாராளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவை ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். ஒன்றின் நிர்வாகத்தில், மற்றொரு அமைப்பு தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி பழனிவேலு பேசினார்.
கலெக்டர் லில்லி, மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு, தர்மபுரி பார்-கவுன்சில் தலைவர் ராமச்சந்திரன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.


