ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பில்லை: கவர்னர் பரத்வாஜ்
ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பில்லை: கவர்னர் பரத்வாஜ்
ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பில்லை: கவர்னர் பரத்வாஜ்

பெங்களூரு: ''ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் அளவுக்கு, கர்நாடகாவில் தற்போதைய அரசியல் சூழ்நிலை அமையவில்லை.
கர்நாடக ராஜ்பவனில் நடந்த, 2010ம் ஆண்டின் ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர், நிருபர்களிடம் கவர்னர் பரத்வாஜ் கூறியதாவது: ஒரு மாநிலத்தில், அரசியல் நிலைமையில் குழப்பம், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டால் மட்டுமே ஜனாதிபதி ஆட்சி குறித்து யோசிக்கப்படும். ஆனால், மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலைமை, அந்தளவுக்கு மோசமாகவில்லை. ஜனாதிபதி ஆட்சியை, நடைமுறைக்குக் கொண்டு வரும் அளவுக்கு, மாநிலத்தின் அரசியல் நிலைமை இல்லை. எனவே, நான் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு, மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யமாட்டேன். கர்நாடக அரசியல் விவகாரத்தில், நான் நுழைய விரும்பவில்லை. புதிய தலைவரைத் தேர்வு செய்ய, பா.ஜ.,வினருக்கு நாளை (இன்று) பிற்பகல் வரை வாய்ப்பளித்துள்ளேன். தலைவரைத் தேர்வு செய்வதில் அவர்கள் தோல்வியடைந்தால், அடுத்த முடிவு மேற்கொள்வேன். கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்துமாறு, மத்திய அரசுக்கு இரண்டு முறை சிபாரிசு செய்து, தோல்வியடைந்துள்ளேன். இனியும் இது போன்ற இழப்புகளுக்குக் காரணமாக மாட்டேன்.
தற்போதைய அரசியல் வளர்ச்சிகள் குறித்து, நேற்று (நேற்று முன்தினம்) மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளேன். அந்த அறிக்கையிலும் ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்த கோரிக்கை விடுக்கவில்லை. மாநிலத்தின் அரசியல் நிலைமை, எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது. இதை நான் குறிப்பிட்டு விவரிக்க வேண்டிய அவசியமில்லை. அரசை அமைப்பதோ அல்லது கவிழ்ப்பதோ எனது பணியல்ல. அரசியல் சாசன தலைவராக, சட்டத்துக்குட்பட்டு பணியாற்றுவேன். சட்டவிரோத சுரங்கத் தொழில் குறித்து, லோக் ஆயுக்தா அளித்துள்ள அறிக்கைக்கேற்ப, அடுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில், நான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து, அதை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், சட்டவிரோத சுரங்கத் தொழில் குறித்து, மற்றவர்களுக்கு எதிராக, அவர் தற்போது எந்த விதத்திலும், நடவடிக்கை எடுக்க முடியாது. லோக் ஆயுக்தாவுக்கு, வழக்கு நடத்த அனைத்து உரிமையும், வசதியும் இருப்பதால், அவர்களே அடுத்த நடவடிக்கை மேற்கொள்வர். பா.ஜ.,வின் புதிய தலைவரின் கீழ், புதிய அரசு அமைவதை நான் எதிர்க்கவில்லை என்று கவர்னர் பரத்வாஜ் கூறினார்.