Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஆதிதிராவிடர் விடுதிகளில் அத்துமீறி தங்குவோரை தடுக்க அதிரடி திட்டம்

ஆதிதிராவிடர் விடுதிகளில் அத்துமீறி தங்குவோரை தடுக்க அதிரடி திட்டம்

ஆதிதிராவிடர் விடுதிகளில் அத்துமீறி தங்குவோரை தடுக்க அதிரடி திட்டம்

ஆதிதிராவிடர் விடுதிகளில் அத்துமீறி தங்குவோரை தடுக்க அதிரடி திட்டம்

ADDED : ஜூலை 27, 2011 01:25 AM


Google News
தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில், அனுமதிக்கப்பட்ட மாணவர்களுடன் வெளிநபர்கள் தங்குவதை தடுக்க, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது. ஒவ்வொரு விடுதிகளிலும் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் பெயர், படிக்கும் கல்வி நிறுவனம் உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து, அதை, அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் வழங்கி, விடுதிகளை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், ஆதிதிராவிடர் சமுதாய மாணவர்களுக்காக 1,204 விடுதிகளும், பழங்குடியினர் மாணவர்களுக்காக 37 விடுதிகளும், மாநிலத்தில் இயங்கி வருகின்றன. ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளில் 80 ஆயிரம் மாணவர்களும், பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் 3,000 மாணவர்களும் தங்கி படிக்கின்றனர். அரசு அனுமதித்த மாணவர்களைத் தவிர, கூடுதலாக வெளிநபர்களும் மாணவர்கள் என்ற போர்வையில் விடுதிகளை ஆக்கிரமிக்கின்றனர். இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை, வெளிநபர்கள் தட்டிப்பறிக்கும் சம்பவங்களும், மாணவர்கள் என்ற போர்வையில் அடிக்கடி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டங்கள் நடத்துவது, கோஷம் போடுவது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. மேலும், விடுதிகளில் வெளிநபர்களால் பல்வேறு சமூக விரோத செயல்களும் அரங்கேற்றப்படுகின்றன. இதனால், மாணவர்களுக்கும், வெளி நபர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன. இந்த சம்பவங்களை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கு, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மற்றும் துறை உயர் அதிகாரிகள், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள விடுதிகளை ஏற்கனவே பார்வையிட்டு, ஆய்வு செய்துள்ளனர். சென்னையில் நடத்திய ஆய்வில், பல விடுதிகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதை அமைச்சரும், அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

வெளிநபர்கள் பெரும்பாலும், இதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவும், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சித் தலைவரின் படங்களை அறைகளில் வைத்துக் கொண்டு, விடுதி வார்டன்களை மிரட்டி, பல ஆண்டுகளாக தொடர்ந்து விடுதிகளில் தங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களைத் தவிர, வெளிநபர்கள் தங்குவதைத் தடுக்கும் வகையில், அதிரடி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு விடுதியிலும் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் பெயர், அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களின் பெயர், முகவரி மற்றும் விடுதியில் ஒவ்வொரு அறையிலும் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் பெயர்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் பட்டியலாக தயாரித்து, அதை ஒவ்வொரு விடுதியிலும், ஒவ்வொரு அறையிலும் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை, சம்பந்தப்பட்ட அறையிலும் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பட்டியலின் நகலை, உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு வழங்கி, அவ்வப்போது விடுதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை கண்காணித்து, வெளிநபர்கள் தங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

ஏ.சங்கரன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us