Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மாமூல் கேட்டு கொலை முயற்சி தி.மு.க., மண்டலத் தலைவர் கைது

மாமூல் கேட்டு கொலை முயற்சி தி.மு.க., மண்டலத் தலைவர் கைது

மாமூல் கேட்டு கொலை முயற்சி தி.மு.க., மண்டலத் தலைவர் கைது

மாமூல் கேட்டு கொலை முயற்சி தி.மு.க., மண்டலத் தலைவர் கைது

ADDED : ஆக 17, 2011 01:00 AM


Google News

மதுரை : மதுரையில் மீன் கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை செய்ய முயற்சித்த வழக்கில், தி.மு.க., அவைத்தலைவரும், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவருமான இசக்கிமுத்து,60, நேற்று கைது செய்யப்பட்டார்.

மதுரை தெற்குவாசலை சேர்ந்தவர் ஹக்கீம்தீன்,36. புதூர் ஐ.டி.ஐ., உட்பட அப்பகுதியில் உள்ள 4 இடங்களில் வாடகைக்கு கடை எடுத்து மீன் வியாபாரம் செய்கிறார். இந்த நான்கு கடைகளுக்கு தலா ரூ.5000 வீதம் மாதம் ரூ.20 ஆயிரம் மாமூல் தரவேண்டும் என்று மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவரும், தி.மு.க., நகர் அவைத்தலைவருமான இசக்கிமுத்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் புதூரைச் சேர்ந்த ஞானசேகரன், சுப்பிரமணி, பொன்னுச்சாமி மற்றும் சிலர் மிரட்டினர்.



ஹக்கீம்தீன் தரமறுத்ததால், கடந்தாண்டு பிப்ரவரியில் ஐ.டி.ஐ., பஸ் ஸ்டாப் கடையை, மாநகராட்சி இடித்தது. பின், மீண்டும் ஹக்கீம்தீன் அந்த இடத்தில் கடை கட்ட, அதுவும் இடிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை தெற்குவாசல் பகுதியில் இசக்கிமுத்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கி, அரிவாளால் வெட்ட முயன்றதாக போலீசில் ஹக்கீம்தீன் புகார் செய்தார். இதன் அடிப்படையில், நேற்று காலை இசக்கிமுத்துவை இந்திய தண்டனை சட்டம் 147(ஒன்று கூடுதல்), 148(கூட்டு சேருதல்), 341(வழிமறித்தல்), 323(தாக்குதல்), 307(கொலை முயற்சி), 506/2(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின்கீழ் தெற்குவாசல் போலீசார் கைது செய்தனர். மதுரை ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மாஜிஸ்திரேட் ஜெயகுமாரி ஜெமி ரத்னா ரிமாண்ட் செய்து உத்தரவிட்டார்.



மண்டல தலைவர்கள் 'கிலி'



அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், நிலமோசடி, இடஆக்கிரமிப்பு, மாமூல் கேட்ட வழக்குகளில் தி.மு.க., நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதுரையில் ஏற்கனவே மாநகராட்சி கிழக்கு மண்டல தி.மு.க., தலைவர் வி.கே.குருசாமி கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மற்றொரு மண்டல தலைவரான இசக்கிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தது தாங்கள்தானா என மீதமுள்ள மேற்கு மற்றும் தெற்கு மண்டல தி.மு.க., தலைவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அடுத்ததாக, தி.மு.க.,வின் நகர் அமைப்பாளர் ஒருவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us