Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/யானை இறப்புக்கு அதிகப்படியான மருந்து காரணமல்ல: ஓசை அமைப்பு கருத்து

யானை இறப்புக்கு அதிகப்படியான மருந்து காரணமல்ல: ஓசை அமைப்பு கருத்து

யானை இறப்புக்கு அதிகப்படியான மருந்து காரணமல்ல: ஓசை அமைப்பு கருத்து

யானை இறப்புக்கு அதிகப்படியான மருந்து காரணமல்ல: ஓசை அமைப்பு கருத்து

ADDED : ஜூலை 19, 2011 12:34 AM


Google News

கோவை : 'அதிகப்படியான மருந்து செலுத்தியதே, 'ரேடியோ காலர்' பொருத்தும் போது யானை இறந்ததற்குக் காரணம் என்பது தவறான கருத்து' என, ஓசை அமைப்பு தெரிவித்துள்ளது.



ஓசை அமைப்பு அறிக்கை: சில நாட்களுக்கு முன், தடாகம் பகுதியில், காட்டு யானைக்கு, 'ரேடியோ காலர்' பொருத்தும் போது யானை இறந்தது.

'ரேடியோ காலர்' என்பது, வன விலங்குகளின் கழுத்தில் மாட்டப்படும் ஒரு கருவி. இக்கருவி, விண்ணில் சுற்றும் செயற்கைக் கோள்களுடன் தொடர்பில் இருக்கும். இதன் மூலம், கருவி பொருத்தப்பட்ட விலங்கு நடமாடும் பகுதிகளை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். வனவிலங்குகளை பின்தொடர்ந்து சென்று ஆய்வுகள் மேற்கொள்ள, இக்கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. காட்டு விலங்குகள் குறித்த பல்வேறு செய்திகளுக்கு, இக்கருவியால் நடத்தப்பட்ட ஆய்வுகளே பெரிதும் காரணமாக உள்ளன.



யானைக்கு இக்கருவியை பொருத்தவேண்டுமானால், யானையை மயக்கமடையச் செய்ய வேண்டும். 'இம்மொபிலான்' மற்றும் 'சைலசின்' என, இருவகையான மருந்துகள் கொடுக்கப்படுவது வழக்கம். 'இம்மொபிலான்' செலுத்தும் போது யானை முழு மயக்கத்துக்கு சென்றுவிடும். 'சைலசின்' செலுத்தும்போது, யானை அரை மயக்கத்துக்குள்ளாகும். பெரும்பாலும் நின்ற நிலையிலிருக்கும்; சில நேரம் படுத்துவிடுவதும் உண்டு. யானைகளுக்கு மயக்க மருந்து செலுத்தும் போது, சில ஆபத்துகள் ஏற்படலாம். யானையின் பெரிய உடல், சில நேரங்களில் அதற்கு பலவீனமாகவும் அமைந்து விடுகிறது.



இவற்றுக்கு, நுரையீரலை பாதுகாக்கும் கவசம் இல்லை. படுக்கும்போது முன்வயிறு அழுத்தப்பட்டால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தாகி விடும். எனவே, மயக்க மருந்து செலுத்தப்பட்ட யானை, வயிறு அழுந்த சாய்ந்தாலோ, நீர்நிலைகளில் அதன் தும்பிக்கை இருந்தாலோ மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர்விட நேரிடும். மேலும், சரிவான பகுதியில் சாய்ந்து விழும்போது, அதன் தலை கீழ் நோக்கி இருந்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மயக்க மருந்து செலுத்தும் போது, யானைக்கு இவ்வகை ஆபத்துகள் இருப்பதை அறிந்தே, இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில நாட்களுக்கு முன், தடாகம் பகுதியில் ஆண் யானை ஒன்றுக்கு, 'ரேடியோ காலர்' கருவி பொருத்தும் போது, அந்த யானை இறந்தது பல தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது. 'சைலசின்' மருந்து செலுத்தப்பட்டவுடன் அந்த யானை ஓடியுள்ளது. சிறிய மேட்டுப்பகுதியில் ஏறி, பள்ளத்தில் இறங்கும் போது மயக்கமடைந்து சாய்ந்துள்ளது. தலைப்பகுதி கீழ்நோக்கி இருந்ததால், குடல் உள்ளிட்ட பகுதிகள் நுரையீரலை அழுத்தி, மூச்சுத்திணறி இறந்துள்ளது. இச்சம்பவத்தை ஒரு விபத்தாகவே கருத வேண்டும். இதில் அளவுக்கு அதிகமாக மருந்து கொடுக்கப்பட்டதால் தான், யானை இறந்தது என்றும், 'ரேடியோ காலர்' கருவியை பொருத்த, இரவில் முயற்சித்ததால் தான் இறந்தது என்பதும் தவறானது. காட்டு விலங்குகளுக்கு செலுத்தப்படும் மயக்க மருந்து, பரிந்துரைக்கப்படும் அளவை விட, இருமடங்கு செலுத்தினாலும், பாதிப்பு ஏற்படாது என, மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இறந்த யானைக்கு பரிந்துரை செய்யப்பட்டது, 5 மி.லி., 'சைலசின்'தான்; அதுமட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.எனவே, அதிகப்படியான மருந்து செலுத்தியதால் தான் யானை இறந்தது என்பது, தவறான கருத்தாகும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us