/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மீஞ்சூரில் கடைகள், ஷேர் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்மீஞ்சூரில் கடைகள், ஷேர் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்
மீஞ்சூரில் கடைகள், ஷேர் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்
மீஞ்சூரில் கடைகள், ஷேர் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்
மீஞ்சூரில் கடைகள், ஷேர் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூலை 27, 2011 03:20 AM
பொன்னேரி : மீஞ்சூரில் சாலையோரக் கடைகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களால்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், வியாபாரிகளும் கடும்
சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.சென்னை புறநகர் பகுதியில் திருவொற்றியூர் -
பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மீஞ்சூர். இங்கு 5 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. தற்போது புதிது புதிதாக ஏராளமான
குடியிருப்புகளும் அமைந்து வருகின்றன.அனுப்பம்பட்டு, நந்தியம்பாக்கம்,
அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின்
வியாபார மையமாகவும் மீஞ்சூர் பகுதி இருப்பதால், நூற்றுக்கணக்கான வியாபார
நிறுவனங்களும் அங்குள்ளது. இதனால் மீஞ்சூர் பஜார் பகுதி எப்போதும் கூட்ட
நெரிசலுடனே காணப்படும்.சாலையோரக் கடைகளின் ஆதிக்கம்:வியாபார நிறுவனங்கள்
இருக்கும் அளவைவிட, மீஞ்சூர் பஜார் பகுதியில், ஏராளமான சாலையோரக் கடைகளும்
இருந்து வருகிறது. சாலையோரத்தில் இருப்பதைவிட, சாலையை ஆக்கிரமித்து
வைக்கப்பட்டுள்ளவையே அதிகம்.சாலையோரக் கடைகளில் குவியும் நெரிசலால்
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், வியாபார நிறுவனங்களுக்கு செல்லும் வழியை அடைத்தும் கடைகள்
வைக்கப்படுவதால், வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.வாகன நெரிசல்
அதிகம்:மீஞ்சூர், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், வடசென்னை அனல் மின்
நிலையம், எண்ணூர் துறைமுகம், கப்பல் கட்டும் தளம், கடல்நீரை குடிநீராக்கும்
நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் அமைந்து
வருகிறது.அந்நிறுவனங்களுக்கு வடமாநிலங்களிலிருந்து, கனரக வாகனங்கள் மூலம்
பல்வேறு கட்டுமான பொருட்கள் மற்றும் மூலப் பொருட்கள் கொண்டு
செல்லப்படுகின்றன. இதனால் பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்
எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும்.இப்பகுதியில் உள்ள
சாலையோரக் கடைகளால் வாகன நெரிசலுக்கிடையே பயணிப்பதால், அவ்வபோது சிறுசிறு
விபத்துகளும் நடந்து வருகிறது.ஷேர் ஆட்டோக்களின் ஆதிக்கம்:மீஞ்சூர் -
பொன்னேரி, மீஞ்சூர் - காட்டூர் இடையே நூற்றுக்கணக்கான ஷேர் ஆட்டோக்கள்
இயக்கப்பட்டு வருகிறது. அந்த ஷேர் ஆட்டோக்கள் சாலைகளின் மையப் பகுதியில்
நின்றபடி, பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்படுகிறது. இதனால் பின்னால் வரும்
வாகனங்கள் வரிசையில் நின்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கிறது.
மீஞ்சூர் ரயில் நிலைய பஜார் பகுதியிலும், அரியன்வாயல் பகுதியிலும் ஷேர்
ஆட்டோக்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.மூடிக்கிடக்கும் புறக்காவல்
மையம்:மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் அசம்பாவிதங்கள் தவிர்க்க,
போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த மீஞ்சூர் பஜார் பகுதியில் புறக்காவல்
மையம் உள்ளது. ஆனால்,அங்கு போலீசார் பணியில் ஈடுபடாததால், காலை, மாலை
நேரங்களில் பள்ளி வேன்களும், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கிறது.
புறக்காவல் மையம் தற்போது மூடியே கிடக்கிறது.போலீசாரின் மெத்தனம்:மீஞ்சூர்
பஜார் சாலையோரக் கடைகளாலும், ஷேர் ஆட்டோக்களின் ஆதிக்கத்தாலும் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதில்
போலீசார் மெத்தனப் போக்கையே கடைபிடிக்கின்றனர்.இது குறித்து, மீஞ்சூர்
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கூறும் போது, ''சாலையோரக் கடைகளால்
போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. விரைவில் அக்கடைகளை அகற்றி, சீரான
போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.