
சென்னை : ''பல்வேறு திட்டங்களில், கொசுறுத் திட்டமாக, மக்களுக்கு இலவசமாக 'எலக்ட்ரானிக் கொசு பேட்'களை வழங்க வேண்டும்'' என்று, இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்தது.சட்டசபையில், நிதியமைச்சரின் பதிலுரைக்குப் பின் நடந்த விவாதம்: குணசேகரன் - இந்திய கம்யூனிஸ்ட் : திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில், தற்போது நெல் அறுவடை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி : திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், 13 இடங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் செயல்படுகின்றன. கடந்த ஆட்சியில், இம்மாவட்டத்தில் நான்கு கொள்முதல் மையங்களே செயல்பட்டன.
பாலகிருஷ்ணன் - மார்க்சிஸ்ட் : பட்ஜெட்டில், கூட்டுறவு மூலம் வழங்கப்படும் கடனை, உரிய காலத்தில் திரும்பச் செலுத்துவோருக்கு வட்டியில்லா பயிர்க்கடன், 3000 கோடி ரூபாய் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடு, தவிர்க்க முடியாத காரணங்கள் மற்றும் கரும்பாலைகள் பாக்கி தொகையை, உரிய நேரத்தில் தராதது போன்றவற்றால், கடனை உரிய காலத்தில், செலுத்த முடியாமல் போகலாம். அவர்களுக்கும் கடன் வழங்க வேண்டும்.
அமைச்சர் செல்லூர் ராஜு : கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த, ஓராண்டு காலம் உள்ளது. இதில், எத்தனையோ பருவங்கள் உள்ளன. எனவே, கடன் தொகையைச் செலுத்த முடியும்.
முதல்வர் ஜெயலலிதா : பட்ஜெட்டில், கடன் பற்றிக் குறிப்பிடும் போது, அனைத்துமே இயல்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இயற்கைச் சீற்றங்கள் நடக்கும் என்று, எப்படிக் கூறுவது. தற்போது, ஏதும் நிகழவில்லை. வந்தால், பார்த்துக் கொள்ளலாம்.


