அகில இந்திய நுழைவுத் தேர்வு திட்டம்: முதல்வர் கடிதம்
அகில இந்திய நுழைவுத் தேர்வு திட்டம்: முதல்வர் கடிதம்
அகில இந்திய நுழைவுத் தேர்வு திட்டம்: முதல்வர் கடிதம்

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம்: மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுமுடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தமிழக அரசு, கடந்த 2005ம் ஆண்டில் இருந்து முயற்சித்து, கடைசியாக தொழிற் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முறை, கடந்த 2007ம் ஆண்டில் இருந்து ரத்து செய்யப்பட்டது.
நிபுணர் குழு விரிவாக ஆராய்ந்து, கிராமப்புற மாணவர்களும், சமூக பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களும், நகர்ப்புற வசதி படைத்த மாணவர்களுடன், இது போன்ற பொது நுழைவுத் தேர்வுகளில் போட்டியிட முடியாது என்பதால், இந்த முடிவை அரசு எடுத்தது. நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி மையங்கள் கேட்கும் கட்டணத்தை, கிராமப்புற ஏழை மாணவர்களால் செலுத்த இயலாது. அதுவும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்றால், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் தேர்ச்சி பெறும் மாணவர்கள், இதற்கென தனியாக பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். தொழிற் கல்விக்கான நுழைவுத் தேர்வை, தமிழக அரசு ரத்து செய்ததால், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய, தகுதிவாய்ந்த கிராமப்புற மாணவர்கள் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.
கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் மருத்துவ படிப்பில் சேர்ந்ததால் தான், தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில், டாக்டர்கள் தேவையை அரசால் பூர்த்தி செய்ய முடிந்தது. மேலும், சமூகநீதியை நிலைநாட்ட, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தொழில் படிப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு முறையை தமிழகம் பின்பற்றுகிறது. இந்நிலையில், பொது நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்தினால், இந்த இடஒதுக்கீடு கொள்கையை சுமுகமாக அமல்படுத்துவதில் குழப்பங்கள் ஏற்படும்.
மேலும், மருத்துவ முதுகலை படிப்பில் சேர, கிராமப்புறங்களில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு என, 50 சதவீத இடங்களை தமிழகம் ஒதுக்கி வைத்துள்ளது. அதிலும், மலைப்பகுதி, பழங்குடியின பகுதிகளில் பணியாற்றிய டாக்டர்களுக்கு, சிறப்பு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதுதவிர, முதுகலை படிப்பை முடிக்கும் மருத்துவ மாணவர்களிடம், குறிப்பிட்ட காலத்துக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டுமென்ற, ஒப்பந்தமும் செய்யப்படுகிறது. பொது நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்தினால், இதுபோன்ற கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் சட்ட சிக்கல்கள் ஏற்படும்.
ஏற்கனவே, இவ்விஷயத்தில் மாநில அரசுகளை கலந்து ஆலோசித்த பின்பு தான், எந்த கொள்கை முடிவும் எடுக்கப்படுமென மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உறுதியளித்து இருந்தார். தமிழக அரசும், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வைநடத்துவது, மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாகும் என்றும், இதனால் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றும், தனது கருத்தை தெரிவித்திருந்தது. ஆனால், பொது நுழைவுத் தேர்வை நடத்தும் தனது முடிவை செயல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முயற்சியை, தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. எனவே, இந்த நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களித்து, தற்போதுள்ள மாணவர் சேர்க்கை முறையே தொடர அனுமதிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.