நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: அரசு உத்தரவு
நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: அரசு உத்தரவு
நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: அரசு உத்தரவு
ADDED : ஜூலை 27, 2011 06:31 PM
சிவகங்கை: கட்டாயகல்வி சட்டம் காரணமாக, நடப்பாண்டு முதல் நேரடி 8ம் வகுப்பு தனிதேர்வு திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு நடக்கிறது. ரயில்வேயில் 'கலாசி'யாக சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெறவேண்டும். அதே போல் துப்புரவு பணியாளர்கள், பதிவு எழுத்தராக பதவி உயர்வு பெறவும், டிரைவிங் லைசென்ஸ் பெறவும் இத்தேர்ச்சி அவசியம். இதற்காக ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு கட்டாய கல்வி சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் மூலம் அனைத்து பள்ளிகளிலும் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் தோல்வி அடைய செய்யக்கூடாது. தனித்தேர்வு மூலம் இந்த வகுப்பிற்கான தேர்வு நடத்தினால், தேர்ச்சி, தோல்வி வெளியிடவேண்டி வரும். எனவே, நடப்பு கல்வி ஆண்டு முதல் நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' இச்சட்டத்தால் 8ம் வகுப்பு நேரடியாக படித்தால் மட்டுமே, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வையும் எழுதமுடியும். இதனால், மத்திய, மாநில அரசு பணிக்கு விண்ணப்பிக்க, 8ம் வகுப்பு தகுதியாக உள்ளதால், இத்தேர்வு எழுத வழியின்றி தவிக்க நேரிடும். இனிவரும் காலங்களில் மாணவர்கள் 8ம் வகுப்புடன் கல்வியை முடித்து விடாமல், பிளஸ் 2 வரையாவது கல்வியை தொடர வேண்டும்,'' என்றார்.