/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பணத்துக்கு ஓட்டளித்தால் பாழாகும் ஜனநாயகம்!பணத்துக்கு ஓட்டளித்தால் பாழாகும் ஜனநாயகம்!
பணத்துக்கு ஓட்டளித்தால் பாழாகும் ஜனநாயகம்!
பணத்துக்கு ஓட்டளித்தால் பாழாகும் ஜனநாயகம்!
பணத்துக்கு ஓட்டளித்தால் பாழாகும் ஜனநாயகம்!
ADDED : அக் 05, 2011 02:11 AM
நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில், தேர்தல் வந்தால் ஓட்டு சேகரிக்க
வேட்பாளர் வருவார்; தன்னலம் கருதாமல், தொண்டர்களும் உடன் வருவர். அது ஒரு
பொற்காலம். ஓட்டு சேகரிக்க வருபவர்களுக்கு, டீ, காபி வாங்கித்தந்து
உபசரிக்கும் சம்பிரதாயம், பிற்காலத்தில் உருவானது. அதுவே, காலப்போக்கில்
மதிய உணவும், மாலை குவார்ட்டருமாக மாறிப்போனது. இப்போதெல்லாம், ஓட்டு
சேகரிக்க உடன் வருபவருக்கு, மதிய உணவு, மாலை குவார்ட்டருடன் சம்பளமும் தர
வேண்டியிருக்கிறது. 'ஓவர் டைம்' பார்த்தால், கணக்கு தனி. நகர்ப்புறங்களில்
மட்டுமல்ல, பெரும்பாலான கிராமங்களிலும் இப்படித்தான் நடக்கிறது, ஓட்டு
சேகரிக்கும் பணி. உடன் வருபவரை தாஜா செய்து, கூவச்சொல்லி, ஓட்டு சேகரிப்பதை
கொக்கு தலையில் வெண்ணை வைத்துப்பிடிப்பதாக எண்ணிய வேட்பாளர்கள், நேரடியாக
வாக்காளர்களுக்கே பணம் தரத்துவங்கிய அராஜகம், கடந்த சில தேர்தல்களாக,
தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பலன் கிடைக்கிறதோ, இல்லையோ,
வீட்டுக்கு வீடு பணம் தரவும் வேட்பாளர்கள் பலர் துணிந்து விட்டனர் என்பதே,
இப்போதைய தேர்தல் களத்தின் நிலவரம். இப்படி பணம் கொடுத்து ஓட்டு கேட்பது,
பணம் வாங்கி ஓட்டளிப்பது பற்றி, மக்கள் என்ன நினைக்கின்றனர் என கருத்து
கேட்டோம். வக்கீல் தமிழ்செல்வன்: பட்டப்படிப்பு படித்தவர்கள் பதவிக்கு
வந்தால் நாகரிகமாக நடந்து கொள்வர் என்று எதிர்பார்க்கலாம். ஆனால்,
பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், படிக்காத, குறைந்த படிப்பு
படித்தவர்களே பொறுப்பில் இருக்கின்றனர். அவர்கள் தான், லஞ்சம் ஊழல்
செய்வதும், தாதா வேலை செய்வதும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதுமாக
இருக்கின்றனர். ஓட்டுக்கு பணம் தருவதும் தவறு; வாங்குவதும் தவறு.
வாங்கிக்கொண்டு, அவர்கள் சொன்னபடி ஓட்டளிப்பது, அதை விடத்தவறு.
வடிவேலாம்பாளையம் பார்த்திபன்: பணம் கொடுத்து ஓட்டு வாங்குபவர், எப்படி
நல்லவராக இருப்பார்? அவர், மக்களுக்கு எப்படி நன்மைகளை செய்வார்? நிச்சயம்
எதுவும் செய்ய மாட்டார். அவருக்கு தேவையான காரியங்களை மட்டுமே செய்து
கொள்வார்.
பி.என். புதூர் நஞ்சப்பன்: பணம் கொடுப்பதும் தவறு. அதை வாங்குவதும் தவறு
தான். இல்லாத கஷ்டத்தில் சிலர் வாங்கிக்கொள்வர் என்றாலும், பணத்துக்காக
ஓட்டளிப்பது தவறு தான். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால், வெற்றி
பெற்றவரை நாம் எந்த கேள்வியும் கேட்க முடியாது. சிங்காநல்லூர் நாகராஜ்:
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால், நிச்சயம் நமக்குத்தான் பாதிப்பு.
வெற்றி பெறுபவர், மக்கள் நலனுக்காக வேலை செய்வார் என்றெல்லாம் எதிர்பார்க்க
முடியாது; செலவழித்த பணத்தை சம்பாதிக்கத்தான் முயற்சி செய்வார். எனவே,
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தவறு தான். காந்திபுரம் முருகேசன்: பணம்
வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவது, மிகக் கேவலமான செயல். அப்படி பணம்
கொடுத்தவர், அதை எவ்வளவு விரைவில் சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில்
சம்பாதிக்க முயற்சிப்பார். விளைவு, ரோடு, சாக்கடை, தெருவிளக்கு என எந்த
வசதியும் நாம் எதிர்பார்க்க முடியாது. ரேஸ்கோர்ஸ் ஆறுமுகம்: அதிகப்படியாக
பணம் இருப்பவர் தான் அள்ளிக்கொடுக்கிறார். அதை இல்லாதவர்கள்
வாங்கிக்கொள்வதில் தப்பில்லை; ஆனால் ஓட்டுப்போடும்போது, நம்
விருப்பத்துக்கு தான் ஓட்டுப்போட வேண்டும். 'பணம் வாங்கி விட்டோமோ'
என்பதற்காக, ஓட்டுப் போடக்கூடாது. உடையாம்பாளையம் ராஜேந்திரன்: பணம்
வாங்கிக்கொண்டு ஓட்டளித்தால், வெற்றி பெற்றவரை யாரும் தட்டிக்கேட்க
முடியாது. 'பணம் கொடுத்ததால் தான் வெற்றி பெற்றோம்' என்ற எண்ணத்தில்
இருப்பவர், யாருக்கும் பயப்பட மாட்டார். பணம் வாங்கியவருக்கும், கேள்வி
கேட்கும் தைரியம் வராது. காந்திபுரம் செல்வராஜ்: கொடுக்கும்போது பணம்
வாங்காமல் விட்டால் நமக்குத்தான் நஷ்டம். நாம் வாங்காமல் விட்டாலும்,
நமக்கு கொடுத்து விட்டதாக கணக்கு காட்டி, கட்சிக்காரர்களே அமுக்கி விடுவர்.
எனவே பணத்தை வாங்கிக்கொள்ளலாம். ஓட்டு போடும்போது, 'யார் நல்லவர்' என்று
பார்த்து, ஓட்டுப்போடலாம். இருகூர் சுரேஷ்: பணம் வாங்கிக்கொண்டு
ஓட்டுப்போடுவது, ஜன நாயகத்தை விற்பனை செய் வது போலாகும். ஓட்டுக்கு பணம்
கொடுப்பது தவறு; வாங்குவது அதை விடப் பெரும் தவறு. பணம் கொடுப்பவர்களுக்கு
ஓட்டு போடாமல் தவிர்ப்பதே சரியான முடிவு. பீளமேடு சாமிநாதன்: நிச்சயமாக
ஓட்டுக்கு பணம் தருவது தவறு தான். ஆனால், வாங்குபவர் மேல் குற்றம் சொல்ல
முடியாது. வழியில்லாதவர்கள் தான், அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்குவர்.
அவர்கள் தாராளமாக வாங்கிக்கொள்ளட்டும். ஆனால், ஓட்டு போடும்போது,
ஜாக்கிரதையாக, நல்லவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டும். அப்போது தான்
நாட்டுக்கும் நல்லது; நமக்கும் நல்லது.
- நமது நிருபர் -


