யாரையும் ஏமாற்றி சொத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை : நடிகர் வடிவேலு குமுறல்
யாரையும் ஏமாற்றி சொத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை : நடிகர் வடிவேலு குமுறல்
யாரையும் ஏமாற்றி சொத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை : நடிகர் வடிவேலு குமுறல்
சென்னை : ''யாரையும் ஏமாற்றி சொத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
இது குறித்து, நடிகர் வடிவேலு கூறியதாவது: யாரையும் ஏமாற்றி வாழ வேண்டும் என்ற நிலை எனக்கில்லை. சினிமாவில் நடித்து தேவையானதை சம்பாதித்து வைத்துள்ளேன். என் நடிப்பின் மூலம், மக்களை சிரிக்க வைத்து பார்ப்பது தான் என் விருப்பம், லட்சியம். பிறரின் சொத்தை அபகரித்து அழவிட நான் எப்படி நினைப்பேன், மனசு வரும்.
என்னை யார் எப்படி ஏமாற்றினர் என்பது பற்றி சில மாதங்களுக்கு முன், தமிழக மக்கள், பத்திரிகைகளில் பார்த்திருப்பர். நல்லவர் போல நடித்து என்னை நம்பவைத்து ஏமாற்றிய நபர் ஒருவர், என் கூடவே இருந்தார் என்பதை நினைக்கும் போது, எனக்கு வேதனையாக இருக்கிறது. என்னிடம் நடிக்க உதவி கேட்டு வந்த சிங்கமுத்துவுக்கு படங்களில் வாய்ப்பு வாங்கி கொடுத்தேன். இந்த சிங்கமுத்து, 2000ம் ஆண்டு என்னிடம் பேசும் போது, 'தாம்பரத்தில் ஒரு சொத்து என்னிடம் உள்ளது. அதற்கான பவர் பத்திரம் என்னிடம் இருக்கிறது' என்றார். 'ஒரிஜினல் பத்திரம் எங்கே இருக்கிறது' என்றதற்கு, 'அது காணாமல் போய்விட்டது, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது' என்றார்.
அவரை நம்பி, 2002ல், அவரிடமிருந்து, 34 சென்ட் நிலத்தை வாங்கினேன். நான் சினிமாவில் பிசியாக இருந்ததால், அந்த இடத்தில் வேலி அமைக்க முடியவில்லை. அதன் பின், 2006ல், காம்பவுண்ட் அமைத்தேன். இந்த நிலம் உள்ள இடத்திற்கு, 2009ல் வந்த பழனியப்பன், அங்கிருந்த எங்கள் காவலாளியிடம், 'இந்த இடத்தை நான், 2006ல் வாங்கியுள்ளேன். இது எனக்கு சொந்தமான இடம். இதில் யார் வேலி அமைத்தது' என கேட்க, இதற்கு காவலாளி, 'இந்த இடத்தை நடிகர் வடிவேலு, 2002லேயே வாங்கியுள்ளார். அவரிடமிருந்தா நீங்கள் நிலம் வாங்கினீர்கள்' என, கேட்டுள்ளார். இதற்கு பழனியப்பன், 'நான் வேறு நபரிடம் வாங்கியுள்ளேன்' எனக் கூறியுள்ளார்.
அதன் பின், 'நடிகர் வடிவேலு, என் நிலத்தை அபகரித்து விட்டார்' என, 2009ல், செங்கல்பட்டு கோர்ட்டில் பழனியப்பன் வழக்கு போட்டார். அவர், 2011 வரை கோர்ட் பக்கமே செல்லவில்லை. நான் வாங்கிய நிலத்தை, எனக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து பழனியப்பனும் வாங்கியதை அறிந்து, அந்த நிலத்தை என்னிடம் விற்ற, சிங்கமுத்து மீது, 2010, ஜனவரியில் போலீசில் புகார் செய்தேன். இது தொடர்பாக, 2010, ஜனவரியில், சைதாப்பேட்டை கோர்ட்டில் சிங்கமுத்து மீது வழக்கும் தொடர்ந்துள்ளேன். வழக்கு விசாரணையில் உள்ளது.
நிலத்தின் பதிவு பத்திரமும். வில்லங்க சான்றும் என் பெயரில் தான் உள்ளது. இவைகளை பார்க்காமல், பழனியப்பன் என் பெயரில் உள்ள நிலத்தை எப்படி வாங்கினார், யார் விற்றது என எனக்கு தெரியவில்லை. இப்போது, பழனியப்பன், போலீசுக்கு போயிருப்பது என்னை மிரட்டி பணிய வைக்கலாம் என நினைத்து சென்றிருப்பாரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. நிலம் வாங்கியதில் நான் தவறு செய்யவில்லை.
இதனால், நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை. இந்த நிலப் பிரச்னை தொடர்பாக போலீசார் யாரும் என்னை விசாரணைக்கு அழைக்கவும் இல்லை; வீட்டிற்கு வரவும் இல்லை. நான் சென்னையில் உள்ள வீட்டில் இருப்பேன். இல்லையேல் மதுரையில் உள்ள என் அம்மா வீட்டில் இருப்பேன். போலீசுக்கு பயந்து தலைமறைவாகவும் இல்லை. போலீசார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் செல்ல தயாராக இருக்கிறேன். இவ்வாறு வடிவேலு கூறினார்.


