பீகார் கவர்னரின் செயல்பாடு: துணை முதல்வர் சுஷில் சாடல்
பீகார் கவர்னரின் செயல்பாடு: துணை முதல்வர் சுஷில் சாடல்
பீகார் கவர்னரின் செயல்பாடு: துணை முதல்வர் சுஷில் சாடல்
ADDED : ஆக 02, 2011 11:45 PM

பாட்னா: 'துணைவேந்தர் நியமனத்தில், மாநில அரசை, கவர்னர் கலந்தாலோசிக்கவில்லை' என, பீகார் மாநில துணை முதல்வர் சுஷில்குமார் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு, ஆறு துணைவேந்தர்கள் மற்றும் நான்கு உதவி துணைவேந்தர்கள் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டனர்.
இந்த நியமனத்தில், மாநில அரசை கவர்னர் தேவானந்த் கன்வர் கலந்து ஆலோசிக்கவில்லை என, பீகார் மாநில துணை முதல்வர் சுஷில்குமார் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநில துணை முதல்வர் சுஷில்குமார் மோடி இதுகுறித்து கூறியதாவது: மாநில கவர்னர், அம்மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ளார். ஆனால், கவர்னர் தேவானந்த் கன்வர், பீகார் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில், ஆறு துணைவேந்தர்கள் மற்றும் நான்கு உதவி துணைவேந்தர்களை நேற்று முன்தினம் நியமிக்கும் போது, இதுகுறித்து, மாநில அரசுடன் கலந்து ஆலோசனை செய்யவில்லை. பீகார் மாநிலத்தின் 1976ம் ஆண்டு பல்கலைக்கழகச் சட்டத்தை மீறி கவர்னர் செயல்பட்டுள்ளார். துணைவேந்தர் மற்றும் உதவி துணைவேந்தர் நியமிப்பதற்கு, மாநில அரசால் தேர்வு செய்யப்பட்டக் குழு இருக்கும் போது, தனிப்பட்ட முறையில் கவர்னர் செயல்பட்டுள்ளார். பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு, ஆண்டிற்கு 1, 100 கோடி ரூபாயை செலவு செய்து வரும் நிலையில், துணைவேந்தர் மற்றும் உதவி துணைவேந்தர்களை நியமிக்க, மாநில அரசுக்கு உரிமையுள்ளது. உள்நோக்கமின்றி, மாநில அரசு செயல்பட்டு வரும் நிலையில், வேண்டும் என்றே இவ்வாறு கவர்னர் செயல்பட்டுள்ளார். இவ்வாறு சுஷில்குமார் மோடி கூறியுள்ளார்.