ஆயுதங்கள் ஒப்படைப்பு: மாவோயிஸ்ட் கட்சியில் எதிர்ப்பு
ஆயுதங்கள் ஒப்படைப்பு: மாவோயிஸ்ட் கட்சியில் எதிர்ப்பு
ஆயுதங்கள் ஒப்படைப்பு: மாவோயிஸ்ட் கட்சியில் எதிர்ப்பு
ADDED : செப் 03, 2011 12:19 AM

காத்மாண்டு: நேபாளத்தில் மாவோயிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்த உடன், அக்கட்சியின் வீரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் அனைத்துக் கட்சிக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு, அக்கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கடந்த 2006ல், நேபாளத்தில் மாவோயிஸ்ட்களின் ஆயுதப் புரட்சி முடிவுக்கு வந்தது. அதையடுத்து, மொத்தம் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் வீரர்களில், 9,000 பேரை நேபாள ராணுவத்திலும், மீதம் இருப்போரை சமூகத்திலும் இணைத்து, மறுவாழ்வு அளிக்க வேண்டும் என, மாவோயிஸ்ட் கட்சி முடிவு செய்தது.ஆனால், 5,000 பேரை மட்டுமே ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்ததால், ஒரு முடிவும் ஏற்படவில்லை. இதனால், அங்கு ஆட்சி நிலையில்லாமல் போனது. ஐ.நா.,வின் அமைதிக் குழு, நேபாளத்தை விட்டுச் சென்ற போது, மாவோயிஸ்ட் வீரர்களைக் கண்காணிக்க, அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை ஏற்படுத்திச் சென்றது.
சமீபத்தில், மாவோயிஸ்ட் கட்சியின் பாபுராம் பட்டாராய் பிரதமராகப் பதவியேற்றார். இதையடுத்து, மாவோயிஸ்ட் வீரர்களின் ஆயுதங்கள் வைக்கப்பட்டிக்கும் ஏழு இடங்களில், இரு இடங்களின் சாவிகள் நேற்று முன்தினம் அனைத்துக் கட்சிக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.இம்முடிவை, மாவோயிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் துணைத் தலைவருமான மோகன் வைத்யா, 'இது தற்கொலைக்குச் சமம்' என்று கூறியுள்ளார்.கட்சித் தலைவர் பிரசண்டா இதற்கு அளித்த பதிலில்,'கட்சியின் நிலைக் குழுவில் எடுக்கப்பட்ட ஐந்து முடிவுகளில் இதுவும் ஒன்று' என்று தெரிவித்துள்ளார்.


