Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஸ்ரீரங்கம் மக்கள் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம் : கல்லூரி திறப்பு விழாவில் முதல்வர் ஜெ., பெருமிதம்

ஸ்ரீரங்கம் மக்கள் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம் : கல்லூரி திறப்பு விழாவில் முதல்வர் ஜெ., பெருமிதம்

ஸ்ரீரங்கம் மக்கள் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம் : கல்லூரி திறப்பு விழாவில் முதல்வர் ஜெ., பெருமிதம்

ஸ்ரீரங்கம் மக்கள் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம் : கல்லூரி திறப்பு விழாவில் முதல்வர் ஜெ., பெருமிதம்

ADDED : ஜூலை 19, 2011 12:29 AM


Google News
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் கலை, அறிவியல் கலைக்கல்லூரியையும், விரைவு பட்டா மாறுதல் திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் துவக்கி வைத்தார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கைøயான கலை, அறிவியல் கல்லூரி அமைப்பது நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் உறுதி அளித்திருந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட இனாம் குளத்தூரில் அரசின் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க அவர் உத்தரவு பிறப்பித்தார். இது பாரதிதாசன் பல்கலையின் உறுப்பு கல்லூரியாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டா மாறுதல்கள் எளிமைப்படுத்தப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழக அரசால் விரைவு பட்டா மாறுதல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட இனாம்குளத்தூரில் புதிய அரசு கல்லூரி துவக்கவிழா, புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்குதல் மற்றும் விரைவு பட்டா மாறுதல் திட்டம் ஆகியவை துவக்க விழா நேற்று நடந்தது.

சென்னையில் இருந்தபடி ஜெயலலிதா இனாம்குளத்தூரில் புதிய அரசு கலைக்கல்லூரியை வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார். ஸ்ரீரங்கம்-வியாழன்மேடு, சத்திரம் பஸ்ஸ்டாண்ட்- கோப்பு, சத்திரம் பஸ்ஸ்டாண்ட்-கோப்பு (வேறு வழித்தடம்), சத்திரம் பஸ்ஸ்டாண்ட்-பெட்டவாய்த்தலை, ஸ்ரீரங்கம்-எட்டரை ஆகிய ஐந்து வழித்தடங்களில் புதிய பஸ்கள் இயக்கத்தையும் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இதற்காக இனாம்குளத்தூரில் நடந்த எளிமையான அரசு விழாவில் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், எம்.பி., குமார், பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா, எம்.எல்.ஏ.,க்கள் மனோகரன், பூனாட்சி, இந்திராகாந்தி, சந்திரசேகர், கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பாண்டியன், பொதுமேலாளர் மணிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் ஸ்ரீரங்கத்தில் அரசு கலைக்கல்லூரியை துவக்கிவைத்த முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதில் உள்ளபடியே பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் நல்லொழுக்கத்துடன் பயின்று, வாழ்க்கையில் பயன்பெறவேண்டும். அவர்கள் ஒளிமயமான வாழ்வைப் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன். புதிதாக துவக்கி வைக்கப்படும் வழித்தட பஸ்களால் மக்கள் பெரிதும் பயன்பெறவுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார். அதேபோல், ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் விரைவு பட்டா மாறுதல் திட்டத்தையும் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் முதல்வர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., பேச்சியம்மாள், ஆர்.டி.ஓ., சங்கீதா, ஸ்ரீரங்கம் தாசில்தார் செல்வம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின் விரைவு பட்டா மாறுதல் திட்டத்தில் 74 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.

விரைவு பட்டாமாறுதல் திட்டத்தை துவக்கிவைத்து முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, 'கடந்த மாதம் சட்டசபையில் பட்டா மாறுதல் எளிமைப்படுத்தப்படும், மக்களுக்கு விரைவாக கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அறிவித்தேன். ஒரு மாதத்தில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய விரைவு பட்டா மாறுதல் திட்டம் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்' என்று பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us