காஷ்மீர் பிரிவினைவாதி குலாம் நபி பாய்க்கு வீட்டுக் காவல்
காஷ்மீர் பிரிவினைவாதி குலாம் நபி பாய்க்கு வீட்டுக் காவல்
காஷ்மீர் பிரிவினைவாதி குலாம் நபி பாய்க்கு வீட்டுக் காவல்
காஷ்மீர் பிரிவினைக்கு சாதகமாக செயல்படும்படி, சில அமெரிக்க எம்.பி.,க்களை பணம் கொடுத்து வளைக்க முயன்ற குலாம் நபி பாய், கடந்த 18ம் தேதி அமெரிக்கப் புலனாய்வுத் துறையால்(எப்.பி.ஐ.,) விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பேர்பேக்ஸ் நகரில், அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு உளவாளியாகச் செயல்பட்டதாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்குப் பின், சிறையில் அடைக்கப்பட்டார்.
விர்ஜினியா மாகாணத்தின் அலெக்சாண்டிரியா நகரில் உள்ள, மாவட்ட கோர்ட்டில் அவரது வழக்கு நடந்தது. நேற்று நடந்த விசாரணையில், பாய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அவர் பாகிஸ்தான் ஏஜன்டாக செயல்படவில்லை. அவர் தனது காஷ்மீர் அமெரிக்க கவுன்சில் கூட்டத்தில், இந்திய ஆதரவாளர்களையும் வரவழைத்துப் பேச வைத்துள்ளார். காஷ்மீருக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்று தான், அவர் பிரசாரம் செய்து வந்தார். காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சொந்தம் என்று அவர் கூறவில்லை' என, வாதிட்டார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் க்ரோம்பெர்க் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுகளாக, ஐ.எஸ்.ஐ.,யுடன் பணியாற்றி வந்ததையும், ஐ.எஸ்.ஐ.,யிடமிருந்து பணம் வாங்கியதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அவரது காஷ்மீர் அமெரிக்க கவுன்சிலின் உறுப்பினர்களுக்கு, ஐ.எஸ்.ஐ.,யிடம் இருந்து பாய் பணம் வாங்குகிறார் என்பது தெரியாது. அவர் தன் வாழ்க்கையை, பொய்களால் நடத்தி வந்திருக்கிறார்.
தேர்தல் பிரசாரத்தின் போது, சில அமெரிக்க எம்.பி.,க்களுக்கு, ஐ.எஸ்.ஐ., அளித்த பணத்தை, நன்கொடை என்ற பெயரில் அளித்துள்ளார். அவர்களில் சிலர் பாயின் கவுன்சிலுக்கும் நன்கொடை தந்துள்ளனர். அதனால், அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும். இவ்வாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் க்ரோம்பெர்க் வாதாடினார்.
எப்.பி.ஐ.,சார்பில் கோர்ட்டில் வாதாடிய, ஏஜன்ட் சாரா வெப் லிண்டன், ''காஷ்மீருக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்ய வேண்டும் என, ஐ.எஸ்.ஐ., பாய்க்கு அடிக்கடி ஆலோசனை கூறியுள்ளது. அவர் நடத்திய ஒவ்வொரு கூட்டத்திலும், பேச்சிலும், ஐ.எஸ்.ஐ.,யிடம் இருந்து பல குறிப்புகளைப் பெற்றுள்ளார். சுருக்கமாகச் சொன்னால், ஐ.எஸ்.ஐ., சொல்லியபடி, பாய் செய்தார்' என்றார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜான் ஆண்டர்சன், குலாம் நபி பாயை சிறையிலிருந்து விடுவித்து, வீட்டுக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். மேலும்,' அவரது நடமாட்டங்களைக் கண்காணிக்கும் வகையில், அவரது கணுக்காலில் 'எலக்ட்ரானிக் டேக்' கட்டப்பட வேண்டும். அவர் எந்த வெளிநாட்டு அரசுடனும் தொடர்பு கொள்ளக் கூடாது. அமெரிக்காவை விட்டு வெளியேறக் கூடாது. ஒரு லட்சம் டாலர், தனிநபர் உத்தரவாத பத்திரம் அளிக்க வேண்டும்' என பல்வேறு நிபந்தனைகளையும் நீதிபதி விதித்தார்.
கோர்ட் உத்தரவுப்படி இன்று பாய் விடுதலை செய்யப்படுவார். இதையடுத்து, பாய் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் அரசுத் தரப்பும், பாயைக் காப்பாற்ற ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில், அவரது வழக்கறிஞர்களும் முனைந்துள்ளனர். இன்னும் அடுத்த ஓரிரு மாதங்களுக்கு, அவர் வீட்டுக் காவலில் இருப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.