கூட்டுறவு தனி அலுவலர்கள் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு
கூட்டுறவு தனி அலுவலர்கள் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு
கூட்டுறவு தனி அலுவலர்கள் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு
சென்னை : கூட்டுறவு தனி அலுவலர்களது பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
கூட்டுறவு சங்கங்களில் இருந்த நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால், 2001ம் ஆண்டு அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்ததும், இச்சங்கங்களில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் நிர்வாகம் நடந்து வந்தது. தனி அலுவலர்களது பதவிக் காலம் ஆறு மாதங்கள் என்பதால், அதற்குள் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த, முந்தைய அ.தி.மு.க., அரசு முயற்சித்தது. ஆனால், புதிய உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்றும், பழைய உறுப்பினர்கள் அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டுமென்றும், பல்வேறு வழக்குகள் ஐகோர்ட்டில் தொடரப்பட்டன. இதனால், தேர்தல் நடத்துவது தள்ளிப் போனது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை, சட்டசபையில், தனி அலுவலர்களது பதவிக் காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு வந்தது. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2007ம் ஆண்டு, ஜூலை மாதம், கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரைக் கூட மனு தாக்கல் செய்ய விடாமல் விரட்டியடித்தனர். இவ்விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியதால், கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்டமாக நடந்த தேர்தலை ரத்து செய்தும், அடுத்தடுத்த கட்டங்களுக்கான தேர்தலை தள்ளி வைத்தும், அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
அப்போது, சட்டசபையில் உள்ள கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, ஒருமித்த கருத்து அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்பும் தேர்தல் நடத்தாமல், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, தனி அலுவலர்களது பதவிக் காலத்தை நீட்டித்து, மசோதா நிறைவேற்றப்பட்டு வந்தது. அவ்வாறு நீட்டிக்கப்பட்டு வந்த தனி அலுவலர்களது பதவிக் காலம், இன்றுடன் (9ம் தேதி) முடிகிறது. எனவே, அதற்குள் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக, கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்கள் நியமன) சட்டத்தை திருத்துவதற்கான மசோதா நேற்று, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்றே இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் லிங்கமுத்து, ''கூட்டுறவு சங்கங்கள் என்பதே மக்கள் பங்கேற்கும் இயக்கம். கடந்த அரசு, ஜனநாயகத்தை காற்றில் பறக்கவிட்டு, தனி அலுவலர்கள் மூலம் நிர்வாகம் செய்தது. அதுபோல புதிய அரசு செயல்படாமல், தனி அலுவலர்களது பதவி நீட்டிப்பை, இதுவே கடைசியாக வைத்து, விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்,'' என்றார்.
மார்க்சிஸ்ட் தலைவர் சவுந்தரராஜன் பேசும்போது, ''தனி அலுவலர்களது பதவிக் காலம் ஒரு நாளில் முடிகிறது. எனவே, வேறு வழியில்லை. ஆனால், மீண்டும் இது போன்ற நிலை ஏற்படாமல் பார்க்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. புதிய அணுகுமுறையை பின்பற்றி, காலவரையறை நிர்ணயித்து அதற்குள் தேர்தல் நடத்த வேண்டும்,'' என்றார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளிக்கையில், ''கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த, சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு உள்ளது. தடை விலக்கப்பட்டால், உடனே தேர்தலை நடத்த வழி வகை செய்யப்படும்,'' என்றார். இதையடுத்து, எதிர்ப்பு ஏதுமின்றி, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.


