டாக்டர் சீட் கிடைத்தும் படிக்க முடியாமல் வறுமையால் பஞ்சர் ஒட்டும் மாணவன்
டாக்டர் சீட் கிடைத்தும் படிக்க முடியாமல் வறுமையால் பஞ்சர் ஒட்டும் மாணவன்
டாக்டர் சீட் கிடைத்தும் படிக்க முடியாமல் வறுமையால் பஞ்சர் ஒட்டும் மாணவன்
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே, டாக்டர் சீட் கிடைத்தும், வறுமை காரணமாக மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல், தன் தந்தையின் சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டும் மாணவருக்கு, தமிழக அரசு உதவுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவிற்குட்பட்டது ஆலத்தூர் கேட் என்ற குக்கிராமம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 483 மதிப்பெண் பெற்று, பள்ளியின் முதல் மாணவனாக ரஞ்சித்குமார், தேர்ச்சி பெற்றார். இதையறிந்த வீரகனூர் ராகவேந்திரா மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், அவரின், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்து, தங்களது பள்ளியில் சேர்த்துக்கொண்டது.
பயாலஜி குரூப்பில் சேர்ந்த ரஞ்சித்குமார், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், 1,167 மதிப்பெண் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்தார். டாக்டர் கனவுக்கு தேவையான மதிப்பெண்களை பெற்ற ரஞ்சித்குமார், டாக்டர் சீட்டுக்கு விண்ணப்பித்தார்.
ரஞ்சித்குமாரின் கட்-ஆப் மார்க், 197.75 என்பதால், கவுன்சிலிங்கில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில், சீட் ஒதுக்கீடு செய்து, வரும் 22ம் தேதி, கல்லூரியில் சேர உத்தரவும் வழங்கப்பட்டது. டாக்டர் சீட் கிடைத்தும், வறுமை காரணமாக, டாக்டர் கனவை மறந்துவிட்டு, தன் அப்பாவின் பஞ்சர் கடையில் வேலை செய்து வருகிறார்.
படிப்பின் மீது காதல் கொண்ட ஒரு ஏழை மாணவனின் படிப்பு, பாதியில் நின்றுவிடாமல் தமிழக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள், கொடை உள்ளம் கொண்டவர்கள் உதவினால், ரஞ்சித்குமாரின் டாக்டர் கனவு பலிக்கும் என்பதில் ஐயமில்லை.
இவருக்கு உதவி செய்யும் கொடை உள்ளம் கொண்டவர்கள், தங்கவேல் 90471-92179, ரஞ்சித்குமார் 80985-06986 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம்.


