Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கடத்தி வைக்கப்பட்டிருக்கும் கணவரை மீட்டுத் தரும்படி இளம்பெண் போலீஸ் கமிஷனரிடம் புகார்

கடத்தி வைக்கப்பட்டிருக்கும் கணவரை மீட்டுத் தரும்படி இளம்பெண் போலீஸ் கமிஷனரிடம் புகார்

கடத்தி வைக்கப்பட்டிருக்கும் கணவரை மீட்டுத் தரும்படி இளம்பெண் போலீஸ் கமிஷனரிடம் புகார்

கடத்தி வைக்கப்பட்டிருக்கும் கணவரை மீட்டுத் தரும்படி இளம்பெண் போலீஸ் கமிஷனரிடம் புகார்

ADDED : செப் 14, 2011 03:19 AM


Google News
வில்லிவாக்கம்:குடும்ப பிரச்னைகளின் பின்னணியில், தங்கையின் குடும்பத்தினரால் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் கணவரை, மீட்டுத் தரும்படி, இளம்பெண் ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்துள்ளார்.சென்னை, வில்லிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ், 37. இவர், சிட்கோ நகர் பகுதியில் பெயின்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மினி, 29. இவர்கள், 10 ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, ஆலன், 10, லிபின், 5, என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இருவரும், நாகர்கோவில் அருகே குறும்பனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாலும், அவருடைய தங்கை மினி மவுலியின் குடும்பத்தினரின் தலையீட்டாலும், பிரின்ஸ் அவரது மனைவி மினிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், வில்லிவாக்கம் போலீசில் இரு தரப்பிலும் புகார்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் மினி, கவுன்சிலிங் மூலம் கணவரை திருத்த முயன்றார். அதற்காக, சென்னை தி.நகரிலுள்ள, ஆங்கில எழுத்து பெயர் கொண்ட தனியார் தமிழ் 'டிவி'யில் ஒளிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை' நேரடி நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். கடந்த மாத இறுதியில் நடந்த நிகழ்ச்சியில் பிரின்ஸ், அவரது மனைவி மினி ஆகியோர், ஒருவர் மீது ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளால், ஏற்பட்ட வாக்குவாதம், மோதலில் முடிந்தது.அதன் பின், பிரின்ஸ் திடீரென்று மாயமானார். மேற்கண்ட நிகழ்ச்சி மூலம் ஏற்பட்ட அவமானத்தால், தன் அண்ணன் மனமுடைந்து காணாமல் போய் விட்டதாக, அவரது தங்கை மினி மவுலி, கடந்த 1ம் தேதி வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்தார்.

இந்நிலையில், வில்லிவாக்கம் போலீசில், தன் கணவர் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், பிரின்ஸின் மனைவி மினி, சென்னை போலீஸ் கமிஷனரிடம், நேற்று முன் தினம் புகார் செய்துள்ளார். அதில், தன் கணவரை அவரது தங்கையின் குடும்பத்தினர் கடத்தி வைத்துள்ளனர். அவரை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி, பிரின்ஸின் மனைவி மினி கூறியதாவது:நாங்கள், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். என் கணவர், என்னை அடித்தாலும், உதைத்தாலும் என்னிடம் பாசமாகவே இருந்தார். அவருக்கு, ஏற்கனவே திருமணமான விஷயம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எனக்கு தெரிய வந்தது. ஆனால், அவரது முதல் மனைவி பற்றி, எந்த தகவலும் எனக்கு தெரியாது. அதே போன்று, அவரது தங்கை மினி மவுலிக்கும், ஏற்கனவே திருமணமான விஷயமும், எனக்கு லேட்டாகத் தான் தெரிந்தது. அண்ணன், தங்கைக்கு இடையே சுமூகமான நிலை இல்லை. மவுலி அவரது இரண்டாவது கணவர் ஆனந்த் பற்றிய தகவல்கள் எதையாவது, நானோ என் கணவரோ 'டிவி' நிகழ்ச்சியில் சொல்லி விடுவோம் என்ற பயத்தில், என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். என் கணவர் காணாமல் போவதற்கு, சில தினங்களுக்கு முன் கூட, மவுலியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். அதற்காக அவரை, நான் கண்டித்தேன். மவுலி புகார் செய்த இம்மாதம் 1ம் தேதி அன்றும் என் கணவர், அவரது தங்கையின் வீட்டில் வாக்குவாதம் செய்ததாக, எனக்கு தெரிந்தவர்கள் என்னிடம் கூறினர். மேலும், என் கணவர் மொபைல் போன் பயன்படுத்த மாட்டார். காணாமல் போன அன்று, அவர் அணிந்திருந்த சர்ட், எங்கள் வீட்டருகே உள்ள போலீஸ் பூத் பின்புறம் கிடந்தது. என் கணவரை மவுலி, அவரது கணவர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் மது ஊற்றிக் கொடுத்து கடத்தி இருக்கலாம் அல்லது அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் இருக்கிறது.

என் கணவர் நேரில் வந்தால் உண்மை தெரியும். எனக்கு, என் கணவர் பிரின்ஸ், தாய் லீலாவதி தவிர வேறு ஆதரவு இல்லை. ஆனால், என் கணவர் விஷயத்தில் வில்லிவாக்கம் போலீசார், மினி மவுலிக்கு சாதகமாகவே செயல்படுகின்றனர். அதனால் தான், போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி., மற்றும் முதல்வர் தனிப்பிரிவில், என் கணவரை மீட்டுத் தரும்படி புகார் செய்துள்ளேன். நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு மினி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us