ADDED : ஜூலை 17, 2011 01:55 AM
மயிலாடுதுறை:சீர்காழி அருகே ஏரியில் ஆய்வு பணிக்குச் சென்ற கலெக்டர் - எம்.எல்.ஏ.,வை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருவாலியில் ராஜேந்திரசோழனால் அமைக்கப்பட்ட 17 லட்சம் கன அடிநீர் தேக்கக் கூடிய ஏரி உள்ளது.
தூர்ந்துள்ள ஏரியில் தற்போது மயிலாடுதுறை எம்.பி., ஓ.எஸ்.மணியன் முயற்சியால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.இப்பணியை நாகை கலெக்டர் முனுசாமி, சக்தி எம்.எல்.ஏ., இருவரும் நேற்று ஆய்வு செய்தனர்.அதைத் தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். கொள்ளிடம் செல்லும் வழியில், குத்தவக்கரையில் இருந்து தைக்காலில் குடியேறிய 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி கலெக்டர் முனுசாமி, சக்தி எம்.எல்.ஏ., ஆகியோரை முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் கலெக்டர், எம்.எல்.ஏ.,வை விடுவித்தனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அலக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை பலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த போது, அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு இருவரையும் முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் இருவரையும் விடுவித்தனர். கலெக்டர், எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.