ADDED : ஆக 20, 2011 03:53 PM
சென்னையின் புராதனக் குடியிருப்புகளுள் இதுவும் ஒன்று.
மயிலாப்பூரின் குடியிருப்புகள் தனித்தனி ஊராகின. அதில், முதலில் பிரிந்தது திருவல்லிக்கேணி. பேயாழ்வார் 'ஒரு வல்லித்தாமரையாளர் ஒன்றிய சீர்மார்வன் திருவல்லிக்கேணியான்' என்றும், திருமழிசை ஆழ்வார் 'நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்' என்றும் குறிப்பிடுகின்றனர்.
மயிலாப்பூர் சிவதலம்; எனவே, வைணவர்கள் திருமாலுக்குக்குத் தனிக் கோவில் கட்டி, கோவிலைச் சுற்றிவாழத்துவங்கிய பின், திருவல்லிக்கேணி என அழைக்கப்பட்டிருக்கக்கூடும். பல்லவன் தந்திவர்மன் காலத்துக்கு (கி.பி., 778-825) முன்பே இக்கோவில் புகழ்பெற்றிருக்க வேண்டும்.
இங்குள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் 91 கல்வெட்டுகள் உள்ளன. இதில் தந்திவர்மன் கல்வெட்டு பழமையானது. மயிலையின் ஒரு பகுதியாகஇருந்து பின், தனிக்குடியிருப்பான திருவல்லிக்கேணி, அரசியல் நிர்வாகத்துக்கு ஏற்ப ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பகுதியின் கீழ் இருந்ததற்கு கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
கி.பி., 1808ம் ஆண்டு தந்திவர்மன் கல்வெட்டில் திருல்லிக்கேணி எனக் குறிப்பிடப்படுகிறது. கி.பி., 1309ம் ஆண்டுக் கல்வெட்டில், 'புலியூர்க் கோட்டத்தில் எழுமூர் நாட்டில் தெள்ளிய சிங்கநாயனார் திருவிடையாட்டமான புதுப்பாக்கத்தில்' எனச் சொல்லப்படுகிறது. புதுப்பாக்கம் திருவல்லிக்கேணியுடன் எழுமூர் நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்கக்கூடும்.
கி.பி., 1793ம் ஆண்டு ஈக்காட்டுத்தாங்கல் கல்வெட்டில், 'சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி' எனக்குறிப்பிடுவதால், அப்போதே சென்னையின் ஒருபகுதியாகத் திகழத்தொடங்கியது அறியவருகிறது. புனிதஜார்ஜ் கோட்டையுடன் கி.பி., 1672ல் சேர்க்கப்பட்டதை சென்னையின் வரலாறுகள் தெரிவிக்கின்றன.
மயிலையின் ஒரு பகுதியான மாவல்லிக்கேணி; அல்லி நிறைந்த நீர்நிலை அருகே அமைந்த குடியிருப்பு ஆகையால், திருவல்லிக்கேணி என அழைக்கப்பட்டிருக்கிறது.


