Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஓட்டு கேட்டு கதவை தட்டும் வேட்பாளர்கள்!

ஓட்டு கேட்டு கதவை தட்டும் வேட்பாளர்கள்!

ஓட்டு கேட்டு கதவை தட்டும் வேட்பாளர்கள்!

ஓட்டு கேட்டு கதவை தட்டும் வேட்பாளர்கள்!

ADDED : அக் 08, 2011 12:28 AM


Google News

அவிநாசி : வழக்கமாக அரசியல்வாதிகளைத்தான் பொதுமக்கள் முற்றுகையிடுவர்; தேர்தல் சமயத்தில், பொதுமக்களை, வேட்பாளர்கள் முற்றுகையிட்டு திணற வைக்கின்றனர்.அவிநாசி பேரூராட்சி தலைவர் பதவிக்கு, ஈஸ்வரமூர்த்தி (தே.மு.தி.க.,), கதிர்வேல் (பா.ஜ.,), கருப்பசாமி (சுயே), முத்துக்குமரன் (பி.எஸ்.பி.,), ரவிச்சந்திரன் (தி.மு.க.,), வாசுதேவன் (பா.ம.க.,), வெங்கடாசலம் (காங்.,), ஜெகதாம்பாள் (அ.தி.மு.க.,) ஆகியோரும், 18 வார்டு கவுன்சிலர்களுக்கு 93 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள், கடந்த இரு நாட்களாக ஓட்டுவேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.அவிநாசியில் மொத்தமுள்ள 15,881 வாக்காளர்களில், 90 சதவீதத்தினரை, முக்கிய வேட்பாளர்கள் குறைந்தபட்சம் இரு முறையாவது சந்தித்து விட்டனர். ஒரு வீட்டுக்கு ஒரு வேட்பாளர் வந்து சென்றதும், பின்னாலேயே அடுத்த வேட்பாளர், 'அய்யா... மறக்காம எனக்கு ஓட்டு போடுங்க,' என்று வணக்கம் வைத்து விட்டு நகர்கிறார். அடுத்ததாக இன்னொரு வேட்பாளர் வருகிறார். ஒவ்வொரு வேட்பாளரும், வாக்காளர்களை 'வளைக்கும்' முயற்சியில் தீவிரமாக உள்ளனர். குறுகிய வீதிகளில் எதிரும், புதிருமாக உள்ள வேட்பாளர்கள் சந்திக்க நேர்ந்தால், 'வணக்கம்' வைத்துக் கொள்ள தவறுவதில்லை.

'குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததையும், நிர்வாகத்திறனையும்,' குறிப்பிட்டு வெங்கடாசலமும், 'ஆளுங்கட்சியாக இருப்பதால், இலவசங்களை பெற்றுத்தந்து, புதிய குடிநீர் திட்டத்தை துவக்குவேன்,' என்று ஜெகதாம்பாளும், 'அவிநாசியை முன்னோடி ஊராட்சியாக மாற்ற சபதம் எடுத்துள்ளேன்,' என ஈஸ்வரமூர்த்தியும், 'அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என்று ரவிச்சந்திரனும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.பா.ஜ., வேட்பாளர் கதிர்வேல், 'அவிநாசியை தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்றுவேன்,' என்று உறுதி கூறுகிறார். தலைவர் பதவி வேட்பாளர்களை தவிர, கவுன்சிலர் வேட்பாளர்களும், வீதி வீதியாக 'ரவுண்ட்' அடித்து வருகின்றனர். தினமும் குறைந்தது ஐந்து வேட்பாளர்களாவது, வாக்காளர்களின் வாசல் கதவை தட்ட தவறுவதில்லை. வாக்காளர்களின் மீதான வேட்பாளர்களின் முற்றுகை இன்னும் சில நாட்களில் அதிகரிக்கும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us