ADDED : செப் 06, 2011 01:43 AM
கோபிசெட்டிபாளையம் : ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோபியில் இருந்து
கேரளாவுக்கு வாழைத்தார் அனுப்புவது அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில்
கோபி, நம்பியூர் மற்றும் டி.என்.பாளையம் வட்டாரத்தில் 5,000க்கும் மேற்பட்ட
ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு
சங்கத்தில் வாரம் இருமுறை நடக்கும் வாழைத்தார் ஏலத்தில் கேரளா உள்ளிட்ட
வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர். கதளி மற்றும்
நேந்திரம் வாழைக்கு மட்டுமே கிலோ கணக்கில் விலை நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. மற்ற வாழைகள் தார் கணக்கில்தான் விற்பனை
செய்யப்படுகிறது. ஓணம் பண்டிகை சீஸன் துவங்கியுள்ளதால், கேரளாவுக்கு
வாழைத்தார் அனுப்புவது அதிகரித்துதள்ளது. கோபி வேளாண் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு சங்கத்துக்கு நடப்பு வாரம் 4,000 வாழைத்தார்கள் ஏலத்துக்கு
வந்தன.
கதளி கிலோ 34 ரூபாய், நேந்திரம் கிலோ 30 ரூபாய், செவ்வாழை தார் 580 ரூபாய்,
ரஸ்தாளி 400 ரூபாய், ரொபெஸ்டா 320 ரூபாய், தேன்வாழை 340 ரூபாய், மொந்தன்
275 ரூபாய், பச்சைநாடா 210 ரூபாய், பூவன் 250 ரூபாய்க்கும் விற்றது.


