Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஒடிசாவிலிருந்து தமிழகத்திற்கு மீண்டும் கிடைத்தது மின்சாரம் : மத்திய அரசு நடவடிக்கை

ஒடிசாவிலிருந்து தமிழகத்திற்கு மீண்டும் கிடைத்தது மின்சாரம் : மத்திய அரசு நடவடிக்கை

ஒடிசாவிலிருந்து தமிழகத்திற்கு மீண்டும் கிடைத்தது மின்சாரம் : மத்திய அரசு நடவடிக்கை

ஒடிசாவிலிருந்து தமிழகத்திற்கு மீண்டும் கிடைத்தது மின்சாரம் : மத்திய அரசு நடவடிக்கை

ADDED : ஜூலை 14, 2011 12:35 AM


Google News

மாசு கட்டுப்பாட்டுத் துறையால் மூடப்பட்ட ஒடிசா மின் நிலையத்தை திறக்க, அம்மாநில அரசு அனுமதித்ததால், மீண்டும் தமிழகத்திற்கு 500 மெகாவாட் மின்சாரம் வரத் துவங்கியுள்ளது.

ஒடிசா மாநிலம், அங்கோல் மாவட்டத்தில் இயங்கும், 'தால்செர் கனிகா' அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் உலர் சாம்பலால், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, ஒடிசா மாநில மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், அங்குள்ள, 'ரிகிரா' நதியை சுற்றியுள்ள விளைநிலங்கள், நிலக்கரி உலர் சாம்பலால் பாதிக்கப்படுவதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, கனிகா அனல் மின் நிலையம் நடத்தும் மத்திய அரசின் என்.டி.பி.சி., நிறுவனத்திற்கு, மாசு கட்டுப்பாட்டுத் துறை நோட்டீஸ் அனுப்பியது. ஒடிசா அரசு உத்தரவால், கடந்த 4ம் தேதி, கனிகா அனல் மின் நிலைய நான்கு யூனிட்டுகள் மூடப்பட்டன. இதனால், அங்கு உற்பத்தியாகும் 2,000 மெகாவாட் மின்சாரம், தென்மாநிலங்களுக்கு கிடைக்காமல் போனது. தமிழகத்திற்கு 500 மெகாவாட் மின்சாரம் ரத்தானதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தில் மின் வெட்டை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில அரசுகள், தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யுமாறு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. மத்திய அரசின் சார்பில், என்.டி.பி.சி., சேர்மன் அரூப் ராய் சவுத்ரி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசி, உலர் சாம்பல் பிரச்னைக்கு மாற்று வழி காண்பதாக உறுதியளித்தார். இப்பிரச்னை குறித்து, சென்னை ஐ.ஐ.டி., நிறுவனத்தினர் மூலம் தயாரிக்கப்பட்ட மாற்று வழி திட்டம் குறித்த வரைபடங்களைக் காட்டி, ஒடிசா முதல்வரிடம் என்.டி.பி.சி., விளக்கமளித்தது.

இதையடுத்து, மீண்டும் மின் உற்பத்தியை துவங்க, ஒடிசா அரசு நேற்று முன்தினம் அனுமதி அளித்ததால், தமிழகம் உட்பட தென்மாநிலங்களுக்கு மீண்டும் தலா, 500 மெகாவாட் மின்சாரம் வரத் துவங்கியுள்ளது. தமிழகத்திற்கு, கடந்த 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை 500 மெகாவாட் கிடைக்காத நிலையில், நேற்று முதல், மத்திய தொகுப்பில் 500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரிய உயரதிகாரி கூறும்போது, 'மீண்டும் மத்திய தொகுப்பில் ஒடிசாவிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வருவதால், ஓரளவு சிக்கல் தீர்ந்தது. ஆனாலும், 2,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளதால், பொதுமக்களுக்கான மின்சாரத்தில் 900 மெகாவாட்டும், தொழிற்சாலைகளுக்கு 900 மெகாவாட்டும் மின்வெட்டு அமலாகிறது' என்றார்.

-நமது சிறப்பு நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us