கனடா தமிழர்கள் பற்றி விமர்சித்த பேராசிரியர் மீது மானநஷ்ட வழக்கு
கனடா தமிழர்கள் பற்றி விமர்சித்த பேராசிரியர் மீது மானநஷ்ட வழக்கு
கனடா தமிழர்கள் பற்றி விமர்சித்த பேராசிரியர் மீது மானநஷ்ட வழக்கு
ADDED : ஜூலை 17, 2011 01:23 AM
டொரன்டோ : இலங்கையைச் சேர்ந்தவரும், சிங்கப்பூரில் பேராசிரியராக பணியாற்றி வருபவருமான ரோகன் குணரத்னா மீது, மூன்று லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட கனடா தமிழ் காங்கிரஸ், மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்தவர் ரோகன் குணரத்னா. இவர், சிங்கப்பூரில் நயாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். பயங்கரவாதம் தொடர்பாக அடிக்கடி, சர்வதேச 'டிவி' சேனல்களுக்கு பேட்டியளிப்பார். கடந்த சில மாதங்களுக்கு முன், இலங்கை பத்திரிகையான லக்பிமா நியூசுக்கு பேட்டியளித்தார். அப்போது, 'கனடா தமிழ் காங்கிரஸ் என்ற பெயரில், விடுதலைப் புலிகள் இயக்கம் டொரன்டோவில் இயங்கி வருகிறது. கனடாவில் விடுதலைப் புலிகளின் முக்கிய அமைப்பாக கனடா தமிழ் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, கனடா அரசும் விசாரணை நடத்தி வருகிறது' என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கனடா தமிழ் காங்கிரஸ், அவதூறு பேட்டியளித்த குணரத்னா மீது, டொரன்டோ கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளது.
கனடா தமிழ் காங்கிரசின் தேசிய செய்தித் தொடர்பாளர் டேவிட் பூபாலபிள்ளை கூறுகையில், ''கனடாவில் வசிக்கும் தமிழர்களின் பல்வேறு பிரச்னைகளை அரசுக்கு முன்வைக்கும் வகையில், கனடா அரசுடன் இணைந்து எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக ஒரு போதும் எங்கள் அமைப்பு செயல்பட்டது கிடையாது. எங்கள் அமைப்பின் நன்மதிப்புக்கு களங்கம் கற்பித்த குணரத்னாவை எதிர்த்து, நாங்கள் தற்போது வழக்கு தொடுத்துள்ளோம்' என்றார்.