/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்
உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்
உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்
உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்
ADDED : ஜூலை 14, 2011 09:48 PM
உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லூரியில், மாணவர் பேரவை தேர்தல் நடத்த வேண்டும் என கோரி மாணவர்கள் 'ஸ்டிரைக்' கில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை அரசு கலைக்கல்லூரியில், 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கல்லூரியில், மாணவர் பேரவை தேர்தல் நடத்த வேண்டும் என கோரி மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் கல்லூரி பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்ற மாணவர்கள் நேற்று மீண்டும் 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர். மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு முன்பு குவிந்ததால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், உடுமலை டி.எஸ்.பி., செந்தில் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவர்களிடம் உடுமலை டி.எஸ்.பி., செந்தில், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,' கல்லூரியில், துறை வாரியாக செயலாளர் தேர்வு நடத்தப்படும்; மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் செயலாளர்கள் மாணவர் பேரவை தலைவர், துணைத்தலைவர், செயலாளர் பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கலாம்; அசம்பாவிதங்களை தவிர்க்க பொதுவாக தேர்தல் நடத்த முடியாது,' என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 'பொதுவாக ஒரு இடத்தில் பெட்டி வைத்து தேர்தல் நடத்தலாம்; அசம்பாவிதங்கள் நடைபெறாது,' என மாணவர்கள் கூறியதோடு தேர்தல் நடத்த வலியுறுத்தினர். இதனையடுத்து மீண்டும் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. கல்லூரி நிர்வாகம் கூறியது போன்று தேர்தல் நடத்த மாணவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து, இரண்டுமணி நேரத்திற்கும் மேலான 'ஸ்டிரைக்' முடிவுக்கு வந்தது.


